அதிகரித்தது இந்திய பலம்

Written by vinni   // November 17, 2013   //

shipஇந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது.

ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது.

இதன்படி அந்த கப்பலை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும், அதற்கான செலவுகளை இந்தியா ஏற்பது எனவும் முடிவானது.

ரஷ்யாவின், செவ்மாஷ் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக 9,300 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. செலவு அதிகரித்ததால் இந்த கப்பலை அதற்கான காலக்கெடுவான 2008க்குள் ரஷ்ய அரசு, ஒப்படைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து மத்திய அரசு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் படி சீரமைப்பு மற்றும் புதிய வசதிகளை ஏற்படுத்துவதற்கான செலவு 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.

இந்த பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இந்த கப்பலுக்கு விக்ரமாதித்யா என பெயர் சூட்டப்பட்டது.

இதை இந்திய கடற்படையில் சேர்த்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக ராணுவ அமைச்சர் அந்தோணி மற்றும் கடற்படை உயரதிகாரிகள் ரஷ்யா சென்றனர். கப்பலை இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சி, ரஷ்யாவின் செவ்மாஷ் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்தது.

ரஷ்யா துணை பிரதமர் டிமிட்ரி ரொகாஜின் இந்த கப்பலை இந்திய கடற்படையிடம் முறைப்படி ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ராணுவ அமைச்சர் அந்தோணியிடம், அதை கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கப்பலில் பறந்த ரஷ்ய தேசியக் கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.


Similar posts

Comments are closed.