தமிழர் பிரச்சினை பற்றி விவாதிப்பதற்கே குர்ஷித் இலங்கை விஜயம்

Written by vinni   // November 17, 2013   //

gk vasanதமிழர்களின் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காகவே வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்று உள்ளார் என்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.

பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர்,

இலங்கையில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை. 8 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.

அதே நேரத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு முன்னேற்றம், வளர்ச்சி, பாதுகாப்பு, சமஉரிமை ஆகியவை கிடைக்கச் செய்வதில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

இலங்கை தமிழர்களின் மேம்பாட்டுக்காக கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அரசு ரூ.45 ஆயிரம் கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கு வீடு, சுகாதாரம், மருத்துவமனைகள், சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்க வகை செய்யும் 13–வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இலங்கை தமிழ் மக்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் சந்தித்து பேசினார். அவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காகவும், அதற்குதீர்வு காண்பதற்காகவும் வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் இலங்கை சென்று உள்ளார்.

அங்கு நடைபெற்று வரும் காமன்வெல்த் மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். அங்கு பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து பேசி இருக்கிறார்.

இலங்கை அரசுடன் தமிழர்களின் பிரச்சினை குறித்து அவர் விவாதிப்பார். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.


Similar posts

Comments are closed.