இதயத்தில் ஓட்டை: நவீன சிகிச்சை மூலம் மருத்துவர்கள் சாதனை

Written by vinni   // November 14, 2013   //

heart_problem_002சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் 17 வயது இளம்பெண்ணிற்கு சிறு துவாரம் மூலம் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் அலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி(17). கூலித்தொழிலாளி மகளான இவர் அலிவலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இதயத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இந்நிலையில் இவர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேற்பரிசோதனையில் இவருக்கு இதயத்தில் 5 செ.மீ. அளவில் துளை இருப்பது தெரிந்தது. இதனால் சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் கலந்து மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இதையடுத்து வளர்மதிக்கு சாதாரண பைபாஸ் அறுவை சிகிச்சை முறையைப் பின்பற்றாமல் அவரது வலது மார்பின் கீழ் பகுதியில் 4 செ.மீ. அளவிற்கு ஒரு துளை ஏற்படுத்தி நவீன சிகிச்சை மூலம் கோளாறு சரி செய்யப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை கடந்த அக்டோபர் 22ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. முதன்முறையாக அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறை பின்பற்றப்பட்டிருப்பதாக இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் ராஜா வெங்கடேஷ், பேராசிரியர் கே.எஸ்.கணேசன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறு துவாரத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்வதால் சில நாள்களிலேயே அன்றாடப் பணிகளைத் தொடங்கலாம். பெரிய தழும்புகள் ஏற்படாது, சிறிய தழும்பே காணப்படும். அந்த தழும்பும் மார்புக்கு கீழே மறைந்துவிடும்.

மேலும் இந்த அறுவை சிகிச்சையின்போது மாணவியின் இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு கருவிகளின் துணை கொண்டு மீண்டும் இதயம், நுரையீரல் இயக்கப்பட்டது.

சுமார் மூன்றரை மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது என்றும் அறுவை சிகிச்சையின்போது ரத்த சேதமும் ஏற்படவில்லை, பெண்களுக்கு இந்த வகையான அறுவை சிகிச்சை உகந்ததாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.