விடுதி மாணவி மர்ம சாவு: மறியலில் விடுதலை சிறுத்தைகள்

Written by vinni   // November 13, 2013   //

pooதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரன். கட்டிட தொழிலாளி. இவரது மகள்கள் சவுந்தர்யா, மாலதி.

இவர்கள் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். மாணவி சவுந்தர்யா கடந்த 2 நாட்களாக விடுதி காப்பாளரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை சவுந்தர்யாவுக்கு மிகவும் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மகளின் உடலை கண்டு கதறி அழுதனர்.

இந்நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் மாணவியின் உறவினர்கள் நிலக்கோட்டை 4 ரோடு சந்திப்பில் 200க்கும் மேற்பட்டோர் மாணவியின் சாவில் மர்மம் உள்ளது. எனவே விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நிலக்கோட்டை டி.எஸ்.பி. கருப்பசாமி, இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான 50–க்கும் மேற்பட்ட பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் பொலிசாரிடம் பரபரப்பு புகார் அளித்தார். அதில் மாணவி சவுந்தர்யா உடல் நிலை சரியில்லாமல் இறக்கவில்லை.

சம்பந்தப்பட்ட விடுதியில் காப்பாளர்களால் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கும், காப்பாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே மாணவி சவுந்தர்யா இறந்துள்ளார்.

எனவே சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இறந்த மாணவி சவுந்தர்யாவின் தங்கை மாலதி கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த விடுதியில் கழிப்பறையை சுத்தம் செய்ய எங்களுக்கு காப்பாளர்கள் தொந்தரவு கொடுப்பார்கள்.

மேலும் விடுதியில் உள்ள சமையல் பாத்திரங்களை கழுவ வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள். இதன் காரணமாக எனது அக்காள் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாவு குறித்து விசாரணை நடத்தப்படும் எனவே மறியலை கைவிடுங்கள் என பொலிசார் கூறியதைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.