முதுகில் குத்திய துரோகிகளுக்கு இனி கட்சியில் ஒருபோதும் இடமில்லை – மனோ

Written by vinni   // November 12, 2013   //

manoவடக்கில் செய்து பார்த்து முடியாமல் போன வேலையை இந்த அரசாங்கம் இப்போது கொழும்பு மாவட்டத்திலும் செய்து பார்க்க முயலுகிறது.

அரசுடன் குடித்தனம் நடத்தும் குழுக்களை தமிழ் கட்சிகள் என்ற பெயரில் களமிறக்கி தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து தலைநகர தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஒழிக்க திட்டமிடப்படுகின்றது. இந்த திட்டத்தில் பிரதான பாத்திரங்களை வகிக்கும் பச்சை, நீல, சிகப்பு நிற தமிழர்கள் எவர் என்பதை விரைவில் கண்டு கொள்ளலாம்.

இந்த அரசியல் வியாபாரத்தை முறியடிக்க, எதிர்வரும் மேல்மாகாணசபை தேர்தலின் போது நமது ஆதரவாளர்கள் அனைவரும் வாக்காளர்களாக மாற வேண்டும். கொழும்பில் தமிழர் வாக்களிப்பு விகிதம் 90 விகிதமாக அமைய வேண்டும். தேர்தல் நேரத்தில் நாட்டில் இல்லாதவர்களை தவிர வாக்குரிமையுள்ள தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க இப்போதே தம்மை தயார் செய்து கொள்ள வேண்டும்.

எங்களுக்கும் ஏனைய குழுக்களுக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? தமக்கு எவராவது ஆதரவளிக்க இருக்கின்றார்களா என இவர்கள் கொழும்பிலே ஆதரவாளர்களை தேடி திரிகின்றார்கள். ஆனால், நாங்கள் எங்கள் பெருந்தொகை ஆதரவாளர்கள் அனைவரையும் வாக்காளர்களாக மாற்றிடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறினார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைநகர மக்கள் ஒன்றுகூடல் இரண்டாம் நிகழ்வு வட கொழும்பு கதிரானவத்தை மைதானத்தில் நடைபெற்றது. கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி தலைவர் மனோ கணேசன், உதவி பொது செயலாளர் சண். குகவரதன் உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்துகொண்டார்கள். இங்கு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இப்போது தமிழ் பிரதிநிதித்துவம் பற்றி போகுமிடமெல்லாம் மக்கள் பேசுகிறார்கள். தமிழர்களுக்கு தாங்கள் வாழும் மாகாணங்களில், மாவட்டங்களில், தொகுதிகளில், ஊர்களில் பூரண அரசியல் பலமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் வந்து விட்டது. தமது வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் தமிழர்களுக்கு வந்து விட்டது.

வாக்குரிமை இல்லாத தமிழர்கள் எப்பாடுபட்டாவது வாக்காளர்களாக தம்மை பதிவு செய்து கொள்கிறார்கள். வாக்குரிமை உள்ள தமிழர்கள் அந்த உரிமையை முழுமையாக பயன்படுத்தி எங்கள் இனத்து பிரதிநிதிகளை வெற்றி பெற செய்வோம் அக்கறையுடன் தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

யுத்தம் முடிந்த உடன் தமிழர் மத்தியில் சோர்வு நிலை காணப்பட்டது. தேர்தல்களில் வாக்களித்து என்ன பயன் என்று நமது மக்கள் சிந்திக்க தலைபட்டார்கள். இந்த காரணத்தால் நாடு முழுக்க தமிழர்களுக்கு, தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதிலும், பதிவு உள்ள தமிழ் வாக்காளர்களுக்கு, வாக்களிப்பதிலும் அக்கறை இருக்கவில்லை.

வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும், கொழும்பு உட்பட மேற்கிலும், தமிழர்கள், இராவணன் ஆண்டால் என்ன? ராமன் ஆண்டால் என்ன ? என்ற மனநிலையில் இருந்தார்கள். இன்று அப்படியல்ல, இராவணனோ, ராமனோ, அது நம்ம ஆளாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். இதிலும் விசேடமாக கொழும்பு மாவட்ட தமிழர்கள், ஒரு படி மேலே போய், தமது வாக்குகளை பெறுவது நமது நம்பிக்கைக்குரிய விலை போகாதவர்களாக இருக்க வேண்டும் என கண்ணில் விளக்கெண்ணை விட்டு தேடி பார்க்கிறார்கள்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இது ஒரு நல்ல சிந்தனை மாற்றம் ஆகும். ஆனால், இதை பார்த்தவுடன் எல்லோருக்கும் மந்திரியாக வேண்டும் என ஆசை வந்துவிட்டது. ஆனால், அப்படி ஆசைப்படுபவர்கள் தங்கள் மனசாட்சியை தொட்டு பார்த்துகொள்ள வேண்டும். தாம் விலை போனவர்களா அல்லது விலை போவதற்கு பதவி தேடுபவர்களா என சம்பந்தப்பட்டவர்கள் தங்களை தாங்களே கேட்டு பார்க்க வேண்டும். ஏனென்றால் கொழும்பில் வாக்கு கேட்பதற்கு ஆசைபடும் அனைவரையும் பற்றியும் வாக்களிக்க போகும் தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.

இன்று எங்கள் கட்சியை மக்கள் மனோ கணேசன் கட்சி என்றும் மக்கள் செல்லமாக அழைக்கின்றார்கள். உண்மையில் இது எனக்கு பிடிக்கவில்லை. என் பெயர் வேண்டாம், என் கட்சியின் பெயர்தான் வேண்டும் என நினைக்கும் கட்சி தலைவன், நான். அந்த அளவுக்கு இந்த கட்சியை நான் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளேன். இனிமேல் எவருக்கும் இந்த கட்சியை பயன்படுத்தி, சொந்த இலாப அரசியல் செய்ய இடம் கொடுக்க மாட்டேன்.

கட்சியால்தான் நாம் வாழ்கின்றோமே தவிர, எவரை நம்பியும் இந்த கட்சி இல்லை. கட்சியின் வெற்றிதான் முக்கியமே தவிர, தனிநபர்களின் வெற்றியல்ல. முதுகில் குத்திய துரோகிகளுக்கு இனி இங்கு ஒருபோதும் இடம் இல்லை. ஆனால், அறியாமல் தவறு செய்து வெளியேறியவர்களுக்கும், அடுத்த கட்சியில் இருந்து என்னை விமர்சித்தவர்களுக்கும் இந்த கட்சியில் இடம் இருக்கிறது. எல்லோரையும் அரவணைக்கும் பெருந்தன்மை என்னிடம் இருக்கின்றது.

இன்று கொழும்பில் வாக்கு கேட்பதற்கு எங்களுக்கு இருக்கின்ற நேர்மையான உரிமையை சுட்டிக்காட்டி நான் பேசினால் சிலருக்கு அதை பொறுத்து கொள்ள முடியவில்லை. அது எப்படி, மனோ கணேசன் தனக்கு மட்டுமே கொழும்பில் அரசியல் செய்ய உரிமை இருக்கின்றது என சொல்கிறார் என கேள்வி எழுப்புகிறார்கள்.

நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை. இவர்களாக கற்பனை செய்து பேசுகிறார்கள். நான் எங்கள் கட்சி கொழும்பில் செய்துள்ள வரலாற்று பணிகளை எடுத்து சொன்னேன். அதேபோல் கொழும்பிலே அடுத்த கட்சிகாரர்கள் செய்யாததையும் எடுத்து சொன்னேன். மக்கள் கஷ்டப்படும் போது இவர்கள் காணாமல் போய் இருந்ததையும் எடுத்து சொன்னேன். உண்மை கசந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. தலைநகர தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.


Similar posts

Comments are closed.