இலங்கை கொலைகாரர்களுக்கு வலிக்கக் கூடாது என்பதே பிரதமரின் நோக்கம் : ராமதாஸ்

Written by vinni   // November 11, 2013   //

ramathasராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், தமிழர்கள் என்ன தான் வேதனையில் துடித்தாலும், இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கையின் கொலைகாரர்களுக்கு வலிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் நோக்கமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள மாட்டார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இச்சிக்கலில் தமிழர்களை ஏமாற்றுவதற்கான நாடகம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்து உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் இராஜபக்சே, இதற்கான சர்வதேச நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் காமன்வெல்த் மாநாட்டை தமது நாட்டில் நடத்தி, அதன் தலைவராக தம்மை முடிசூட்டிக் கொள்ளத் துடிக்கிறார். இதைத் தடுக்கவே காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் வலியுறுத்தினர். இதன் மூலம் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வைக்க முடியும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

ஆனால், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது என்பது தான் தமிழர்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்பது போன்றும், பிரதமர் பங்கேற்காவிட்டால் ஈழத்தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது போன்றும் ஒரு தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இப்போது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டவுடன், அது ஆறுதல் அளிப்பதாக ஒரு பிரிவினரும், தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று இன்னொரு பிரிவினரும் கூறி கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளாததால் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அதுமட்டுமின்றி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த 10 காமன்வெல்த் மாநாடுகளில் ஐந்தில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்களோ அல்லது குடியரசுத் துணைத் தலைவரோ தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் தான் இப்போதும் பிரதமருக்கு மாற்றாக வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்கிறார். இதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினையில் இலங்கைக்கு எந்த நெருக்கடியையும் நம்மால் தர முடியாது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களைக் கண்டித்து காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்று பிரதமர் அறிவித்திருந்தாலாவது அது இலங்கைக்கு குறைந்த பட்ச நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், தமக்கு பதில் வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது மட்டுமின்றி, அம்மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? என்பதை விளக்கி அதிபர் இராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம் எழுதியிருக்கிறார். தமிழர்கள் என்ன தான் வேதனையில் துடித்தாலும், இந்தியாவின் நடவடிக்கைகள் இலங்கையின் கொலைகாரர்களுக்கு வலிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் பிரதமரின் நோக்கமாக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு புறம் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காததால் இலங்கையுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இலங்கையுடனான உறவையே முறித்துக் கொள்ள வேண்டும் என தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இலங்கையின் உறவுக்காக சல்மான் குர்ஷித் உருகுகிறார். இவர்களைப் போன்றவர்கள் இலங்கையிடம் வலியுறுத்தி தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் இலவு பழுக்கும் என்று காத்திருப்பதும் ஒன்று தான்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மாறாக காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்திருப்பதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்; சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.