காணாமல் போனதாக கூறப்படும் எவரும் இரகசிய முகாம்களில் இல்லை- ஜனாதிபதி ஆணைக்குழு

Written by vinni   // November 11, 2013   //

kaanaamal1காணாமல் போனவர்கள் இரகசியமான முகாம்களில் இல்லை என காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மன்னார் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் வடக்கில் காணாமல் போன 2 ஆயிரத்து 301 நபர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அண்மையில் ஆணைக்குழுவிடம் கையளித்த போதே ஆணைக்குழு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன தமது பிள்ளைகள் இரகசியமான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இங்கு கருத்து தகவல் வெளியிட்ட மன்னாரை சேர்ந்த தாய் ஒருவர்,

எனது பிள்ளை காணாமல் போனது தொடர்பில் 49 தடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தேன். எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

தற்பொழுது 50வது தடவையாக இந்த ஆணைக்குழுவின் முன் முறைப்பாடு செய்கிறேன் என்றார்.

காணாமல் போன தமது பிள்ளைகள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் போதும், எதிர்ப்பு ஆர்ப்பாடங்களில் கலந்து கொள்ளும் போதும் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள் தம்மை அச்சுறுத்துவதாக பெற்றோர் ஆணைக்குழுவின் முன் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரகசியமான முகாம்கள் இருந்தால் அது பற்றி சாட்சியங்களுடன் தகவல்களை முன்வைக்குமாறும் அமைதியான சூழலை உருவாக்குவதற்காக இராணுவத்தின் சம்பந்தம் இல்லாத விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மெக்ஸ்வல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.