பிலிப்பைன்சை தொடர்ந்து வியட்நாமிலும் ஹையான் சூறாவளி தொடரும் என அச்சம் : 6 லட்சம் மக்கள் வெளியேற்றம்

Written by vinni   // November 11, 2013   //

Vietnam Asia Typhoonபசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்சில் 7000-த்திற்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. வருடத்திற்கு 20 பெரும் புயல்களை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மையப்பகுதியில் ஹையான் என்ற கடும் சூறாவளி தாக்கியது.

மணிக்கு 315 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த சூறாவளிக்கு லெய்ட் மாகாணத்தின் டாக்லோபான் நகரின் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் அனைத்தும் தரைமட்டமாயின. 2,22,000 மக்களை கொண்ட இந்நகரில் 100-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே இறந்து கிடந்தனர்.

மேலும் சூறாவளிக்காற்றுடன் 10 மீட்டர் அளவிற்கு எழுந்த சுனாமி போன்ற கடல் அலைகள் தாக்கியதில் கடற்கரை நகரங்களின் வீடுகளும் பாதிக்கப்பட்டன. மின்சாரம், சாலை போக்குவரத்துகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாததால் உயிருக்காக பலர் போராடிக் கொண்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பிலிப்பைன்சின் மிக மோசமான புயல்களில் ஒன்றான இந்த ஹையான் புயலின் விளைவாக 1200 பேர் இறந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,பிலிப்பைன்சை தாக்கிய ஹையான்  தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி நகர்ந்து வருகிறது.பிலிப்பைன்சை துவம்சம் செய்ததுபோல் ஹையான் சூறாவளி வியட்நாமிலும் கடும் பாதிப்பை ஏற்படுதும் என அஞ்சப்படுகிறது.

போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வியட்நாம் அரசு துரிதப்படுத்தியுள்ளது.ராணுவம்,கடலோர காவல்படை,நிவாரணம் மற்றும் மீட்புப்படையினர் எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு,பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை ஹையான் சூறாவளி வியட்நாம் கடலோர மாவட்டங்களை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.