பாகிஸ்தான் ஏமாற்றம்! தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

Written by vinni   // November 10, 2013   //

pakistan_southafrica_2odi_002பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யு.ஏ.இ.,) சென்றுள்ள பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன.

மூன்று போட்டிகளின் முடிவில் தென் ஆப்ரிக்கா 2-1 என முன்னிலை வகித்தது.

நான்காவது போட்டி அபுதாபியில் நடந்தது, நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஹசிம் ஆம்லா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 87 ஓட்டங்கள் சேர்த்த போது ஆம்லா(46) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். டுபிளசி(10) ஏமாற்றினார். அணித்தலைவர் டிவில்லியர்ஸ்(30) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

அபாரமாக ஆடிய குயின்டன் டி காக், பாகிஸ்தான் பந்துவீச்சை பதம்பார்த்தார். முகமது இர்பான் பந்தை சிக்சருக்கு அனுப்பிய குயின்டன், ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 266 ஓட்டங்கள் எடுத்தது.

பாகிஸ்தான் சார்பில் முகமது ஹபீஸ், ஜுனைடு கான் தலா 2, முகமது இர்பான் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 49.2 ஓவரில் 238 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்ரிக்கா சார்பில் ஸ்டைன் 5 விக்கெட் கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்ரிக்க அணி 3-1 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நாளை சார்ஜாவில் நடக்கிறது.


Similar posts

Comments are closed.