பிரபாகரன் படம் வைத்திருந்த நெடுமாறன் உள்பட 6 பேர் மீது வழக்கு

Written by vinni   // November 10, 2013   //

court-order1தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் பொறித்த விளம்பரப் பதாகைகளை வைத்திருந்ததாகக் கூறி, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் உள்பட 6 பேர் மீது தஞ்சாவூர் தாலுகா பொலிஸார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு தொடர் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியையொட்டி, விளார் புறவழிச் சாலையில் விளம்பரப் பதாகை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, பழ. நெடுமாறன், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சி குழுத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன், உறுப்பினர்கள் சந்திரேசன், காசி ஆனந்தன், வி. தீனதயாளன், உலகத் தமிழர் பேரவை அறக்கட்டளை உறுப்பினர் இளவழகன் ஆகியோர் மீது தஞ்சாவூர் தாலுகா பொலிஸார் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

பொது இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பதாகையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் இடம்பெற்றுள்ளதாகவும், காவல் துறையினரின் விதிமுறைகள், வழிகாட்டுதலை மதிக்கவில்லை எனவும் கூறி இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, அதே பகுதியில் சுவரொட்டி ஒட்டியதாகவும் அவர்கள் 6 பேர் மீது தாலுகா பொலிஸார் மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Similar posts

Comments are closed.