பிரித்தானிய பிரதமர் வட மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார்

Written by vinni   // November 10, 2013   //

david kemarunபிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார். எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பொதுநூலக கேட்போர் கூடத்தில் பிரித்தானிய பிரதமருக்கும் வட மாகாண ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. வடக்கின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் கைதிகள், மனிதாபிமான நிலைமைகள், இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பிரதமர் கமரூனைச் சந்தித்த பேச்சுவார்த்தi நடத்த உள்ளனர். விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர், அவர் சந்திக்கும் மிக முக்கியமான உலகத் தலைவர் கமரூன் என்பது குறிப்பிடத்தக்கது. கமரூன் வலி.வடக்கு இடம்பெயர்ந்தோரை சந்தித்துப் பேசுவார்

யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல்முறையாக செல்லும்; பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நலன்புரி நிலையத்துக்கும் செல்லவுள்ளார் என்று தெரியவருகிறது. இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய அரசுத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தரும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் வடக்கு மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள நலன்புரி நிலையத்துக்கும் செல்லவுள்ளார். அங்கு கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இடம் பெயர்ந்து வாழ்ந்துவரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிவார்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படாத நிலையில் அந்த மக்களின் காணிகளை இராணுவத் தேவைக்காகச் சுவீகரிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன. இதன் முன்னேற்பாடாக அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகள் கனரக வாகனம் மூலம் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியிலேயே டேவிட் கமரூன் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களை முகாமில் சந்தித்துப் பேசவுள்ளார். அன்றையதினம் இரவே அவர் மீண்டும் கொழும்பு திரும்புவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


Similar posts

Comments are closed.