பத்ம விருதுகளிலும் அரசியல்: அம்பலமாகும் உண்மை

Written by vinni   // November 10, 2013   //

msvகலைத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி வருகிறது.
நமது தமிழ்நாட்டில் உள்ள பல கலை வல்லுனர்களுக்கு இன்னும் இவ்விருதுகள் வந்து சேரவில்லை என்ற ஆதங்கம் தமிழர்களிடம் மேலோங்கி உள்ளது.

குறிப்பாக, தமிழர்களின் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்திருக்கும் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இவ்வளவு காலம் ஆகியும் பத்ம விருது வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமும், ஆற்றாமையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட அனைத்து தமிழர்களுக்குமே உண்டு.

இந்நிலையில், பத்ம விருதுகளுக்கு உரிய கலைஞர்களை எந்த அளவுகோலின்படி தேர்வு செய்கிறார்கள்? இதுவரை யார் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று யார்,யார் பரிந்துரைத்துள்ளார்கள்? என்று சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வினாக்கணை தொடுத்திருந்தார்.

தகவல் அறியும் ஆணையம் மூலம் பெறப்பட்ட பதில்கள், பட்டங்களும், பதக்கங்களும், பதவிகளும் பணமும், செல்வாக்கும் இருந்தால் மட்டுமே பெறமுடியும் என்பதை சராசரி இந்தியர்களுக்கு புரிய வைத்துள்ளது.

2013 – பத்ம விருதுகளுக்கு மட்டும் ஆயிரத்து 300 கலைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் செல்வாக்கு படைத்த பலர், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அமர்சிங், தனது நம்பிக்கைக்குரிய நடிகை ஜெயபிரதாவை பரிந்துரைத்துள்ளார்.

பிரபல ‘சரோட்’ வாத்திய இசை மேதையான உஸ்தாத் அம்ஜத் அலிகான் தனது 2 மகன்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார்.

நாடு போற்றும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது சகோதரி உஷாவுக்கு பத்ம விருது வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார் என்பது இந்த தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது.

 


Similar posts

Comments are closed.