இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் உரிமை பிரித்தானியாவுக்கு இல்லை: அரசாங்கம்

Written by vinni   // November 9, 2013   //

srilanka flgஇலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் எந்த உரிமையும் பிரித்தானியாவுக்கோ வேறு எந்த நாடுகளுகோ இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய சர்வதேச விசாரணை ஒன்றின் அவசியம் குறித்து தனது இலங்கை விஜயத்தின் போது வலியுறுத்தப்படும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்தமை தொடர்பில் பதிலளிக்கும் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை கூறினார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரமான நாடு என்ற வகையில் அப்படியான அழுத்தங்களுக்கு அடிப்பணிய இலங்கை தயாரில்லை.

இறையாண்மையுள்ள சுதந்திர நாடான இலங்கைக்கு பிரித்தானிய பிரதமர் உண்மையில் அப்படியான அழுத்தங்களை கொடுத்தாரா என்பதை நான் அறியவில்லை என்றார்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதிகளை கடந்த வியாழக்கிழமை சந்தித்த பிரதமர் கமரூன், சுதந்திரமான விசாரணை நடத்த இலங்கை தவறினால் மட்டுமே சர்வதேச விசாரணை ஒன்று அவசியப்படும் என்று தெரிவித்திருந்தார் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பாக தனிப்பட்ட விடயங்களை கலந்துரையாடும் என்ற நோக்கமும் இல்லை என அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.


Similar posts

Comments are closed.