சோச்சி குளிர்கால ஒலிம்பிக் ஜோதி விண்வெளிக்கு பயணம்

Written by vinni   // November 8, 2013   //

olimpic_003ரஷ்யாவில் உள்ள சோச்சி நகரில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடங்கி 23 ஆம் திகதி முடிய உள்ள இப்போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி கிரீசில் ஏற்றப்பட்டு அக்டோபர் 7 ஆம் திகதி தனது பயணத்தைத் தொடங்கியது.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே முதன்முறையாக நீண்ட தூரமான 65,000 கி.மீ பயணிக்கும் இந்த ஜோதி ஆகாய விமானம், ரயில், கார் மற்றும் கலைமான்கள் பூட்டப்பட்ட ஸ்லெட்ஜ் வண்டி ஆகியவற்றில் பயணம் செய்கின்றது.

130 நகரங்களில் நிறுத்தப்படும் இந்த ஜோதியினை மொத்தம் 14,000 வீரர்கள் ஏந்திச் செல்கின்றனர்.

வட துருவம், உலகிலேயே ஆழமான ஏரியின் அடிப்பகுதி, ஐரோப்பாவின் உயரமான மலை முகடு மற்றும் விண்வெளி ஆகிய இடங்களுக்கும் இந்த ஒலிம்பிக் ஜோதி எடுத்துச் செல்லப்படுகின்றது.

கடந்த 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் ஜோதி விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதுபோல் சோச்சியில் நடைபெறும் போட்டியின் ஜோதியும் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 8.14 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து சோயுஸ்-எப்ஜி ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த முறை சனிக்கிழமையன்று இரண்டு விண்வெளி வீரர்கள் ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கொண்டு விண்வெளியிலும் சிறிது நேரம் நடக்க உள்ளார்கள். இந்தப் பயணம் முடியும்வரை பாதுகாப்பு கருதி அந்த ஜோதி அணைக்கப்பட்டுள்ளது.

அமைதிக்குரிய அடையாளமான இந்த ஒலிம்பிக் ஜோதிக்காகப் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது என்று ரஷ்ய வீரரான டியுரின் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.