மன்மோகன் விடயத்தில் மர்மம் நீடிக்கிறது

Written by vinni   // November 8, 2013   //

soniya manmohanமிகுந்த எதிர்பார்ப்புடன், டில்லியில் நேற்று (07) கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலங்கைக்கு பிரதமர் மன்மோகன் சிங் செல்வது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனால், இலங்கை விவகாரத்தில், மத்திய அரசின் நிலை குறித்த கேள்விக்குறி நீடிக்கிறது. காங்கிரசின் உயர்மட்டக் குழு அனேகமாக இன்று (08) கூடி, இந்த பிரச்னையில் முடிவு எடுக்கும் என தெரிகிறது.

இலங்கையில், வரும், 15ம் திகதி ஆரம்பமாக இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ள, கடந்த வாரம் நடந்த காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளும், பல்வேறு அமபை்புகளும், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை செல்லக்கூடாது; மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் ஏகமனதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோரும், தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, இலங்கை மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

இச்சூழ்நிலையில், இலங்கைக்கு பிரதமர் போவாரா, மாட்டாரா என்ற கேள்வி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வது குறித்து, மத்திய அமைச்சரவை கூடி, முடிவெடுக்கும் என, தகவல்கள் வெளியாகின. அதனால், நேற்றைய அமைச்சரவை முடிவை, அரசியல் வட்டாரங்கள் ஆவலோடு எதிர்பார்த்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், மத்திய அமைச்சரவை கூட்டம், நேற்று மாலை, பிரதமர் முன்னிலையில், டில்லியில் நடந்தது.

ஆனால், இந்த கூட்டத்தில், இலங்கை விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. வழக்கமாக, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து தான் பேசப்படும். அதன்படி, தெலுங்கானா விவகாரம் குறித்து மட்டுமே நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது, என, மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

எனவே, இலங்கை மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற கேள்விக்கு, நேற்று எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில், இது போன்ற வெளியுறவு விஷயத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசியல் விவகாரக் குழு அல்லது காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு தான் கூடி முடிவு எடுக்கும். அமைச்சரவையில் இது பற்றிய விவாதம் நடத்தப்படுவது எப்போதும் வழக்கமல்ல என, தெரிவித்தனர். காங்கிரஸ் உயர்மட்டக் குழு டில்லியில் இன்று கூடி, இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்கும் என, தெரிகிறது.


Similar posts

Comments are closed.