இலங்கை அரசின் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு

Written by vinni   // November 7, 2013   //

commenகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் அரச தலைவர்களை தனித்தனியாக அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளுக்கு பொதுநலவாய அமைப்பின் செயலகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அரச தலைவர்களை தாமரை தடாகத்தில் (நெலும் பொக்குண) இருந்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசாங்கம் விலை உயர்ந்த பென்ஸ் கார்களை இறக்குமதி செய்துள்ளது.

தலைவர்கள் தலா ஒரு பென்ஸ் காரில் ஏற்றப்பட்டு அந்த வாகனங்களுக்கு பின்னாலும் முன்னாலும் யானைகள் மற்றும் குதிரைகள் செல்ல தலைவர்களை மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுநலவாய நாடுகளின் செயலகம், ஆடம்பர சொகுசு பஸ் ஒன்றில் பாதுகாப்பாக சகல தலைவர்களும் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் இழுபறி நிலை தொடர்வதுடன் இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.

இதனிடையே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய மகாராணிக்கு பதிலாக கலந்து கொள்ளும் இளவரசர் சார்ள்ஸ் 24 மணிநேரத்திற்கும் குறைவான காலமே இலங்கையில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது.

15ம் திகதி மதியம் இலங்கை வரும் அவர் 16 ஆம் திகதி மதியத்திற்கு முன்னதாக இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இளவரசர் சார்ள்ஸூக்காக கொழும்பு சினமன் கார்டன் ஹோட்டலில் இராப்போசனம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கான அழைப்பு லண்டன் பங்கிங்ஹாம் அரண்மனை ஊடாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பை விடுக்க இலங்கை அரசுக்கு இடமளிக்கப்படவில்லை. ராஜபக்சவினர் இந்த இராப்போசனத்திற்கு தமக்கு நெருக்கமானவர்களுக்கு அழைப்பு விடுக்கவிருந்தனர்.

எனினும் விருந்துக்கு இளவரசர் சார்ள்ஸ் அழைப்பு விடுத்தாரா என அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்வதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் மாநாடு நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மாநாட்டில் எத்தனை நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்ற தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

இதனால் மாநாட்டுக்கு வருவதாக உறுதியளித்த அரச தலைவர்களை விட குறைவான அரச தலைவர்களே கலந்து கொள்வார்கள் என்ற காரணத்தினால் அமைச்சு இதுவரை அதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறும் நாட்டுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைமைத்துவம் வழங்கப்படும்.

இதனை விடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்படவில்லை எனவும், இரண்டு வருட காலத்திற்கு வழங்கப்படும் இந்த தலைமைத்துவம் இடையில் வேறு ஒருவர் நாட்டின் தலைவராக தெரிவானால் அவரும் அதன் தலைவராக இருப்பார் என்றும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

இதனை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மூடி மறைக்கும் அரசாங்கம், மகிந்த ராஜபக்சவின் வெற்றியாக இதனை சித்தரிக்குமாறு ஊடகங்களுக்கு அழுத்தங்களை கொடுத்து வருவதாக அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.