உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று ரூ.14 கோடி பரிசை தட்டிச்செல்வது யார்?

Written by vinni   // November 6, 2013   //

13-viswanathan-anand300இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்– நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 9–ந்தேதி முதல் 26–ந்தேதி வரை அண்ணாசாலையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது.

இந்த போட்டி மொத்தம் 12 சுற்றுகளை கொண்டது. அதிக புள்ளிகளை பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 12 சுற்றுகள் முடிவில் சமநிலை ஏற்பட்டதால் டைபிரேக்கர் முறையில் பந்தயம் நடைபெறும். 28–ந் தேதி அன்று டைபிரேக்கர் ஆட்டம் நடைபெறும்.

சென்னையில் உலக செஸ் போட்டி நடைபெறுவதால் இதில் யார் சாம்பியன் பட்டம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமாக உள்ளது.

ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார். 2000–ம் ஆண்டு ஈரான் தலைநகர் டெக்ரானில் நடந்த போட்டியில் அலெக்சி ஹிரோவை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2007–ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த போட்டியில் 2–வது முறையாக உலக சாம்பியன் ஆனார். 2008–ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த போட்டியில் கிராம்னிக்கை வீழ்த்தி 3–வது முறையாக பட்டம் வென்றார்.

2010–ம் அண்டு வாஸ்லின் தபோலோவையும், கடந்த ஆண்டு போரிஸ் ஜெல் பாண்டையும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

தற்போது 6–வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் ஆனந்த் உள்ளார்.

நார்வேயை சேர்ந்த 22 வயதான மாக்னஸ் கார்ல்சென் 43 வயதான ஆனந்துக்கு கடும் சவாலாக விளங்குவார். 21 வயது இடை வெளி கார்ல்செனுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19 வயதில் கார்ல்சென் உலகின் முதல்நிலை வீரராக திகழ்ந்தார். தொடர்ந்து இன்று வரை அவர் நம்பர் ஒன் வீரராக திகழ்கிறார். உலக தரவரிப்பட்டியலில் அவர் 2870 ரேட்டிங் புள்ளிகளை வைத்துள்ளார். உலக செஸ் வரலாற்றில் எந்த ஒரு வீரரும் இந்த ரேட்டிங் புள்ளியை பெற்றது கிடையாது.

நடப்பு சாம்பியன் என்பதால் ஆனந்த் நேரடியாக உலக போட்டியில் ஆடுகிறார். லண்டனில் நடைபெற்ற கேன்டிடட் போட்டியில் ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கை மாக்னஸ் கார்ல்சென் வீழ்த்தியதால் ஆனந்துடன் மோதும் வாய்ப்பை பெற்றார்.

முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் அவர் உள்ளார்.

சொந்த மண்ணில் போட்டி நடைபெறுவதால் சென்னையை சேர்ந்த ஆனந்த் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆவலில் உள்ளார்.

இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.14 கோடியாகும். வெற்றி பெறுபவருக்கு 60 சதவீதம் வழங்கப்படும். சுமார் ரூ.8.4 கோடி கிடைக்கும். தோல்வி அடைபவருக்கு 40 சதவீதம் (ரூ.5.6 கோடி) கிடைக்கும்.


Similar posts

Comments are closed.