யாழ். விஜயம் என்ற போர்வையில் மாநாட்டுக்கு வருகிறார் மன்மோகன் சிங்?

Written by vinni   // November 6, 2013   //

manmohanஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கும் வகையில் புதிய வியூகத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்புக்கு சென்று மாநாட்டில் பங்கேற்பதுடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் செல்லும் வகையில் பயணத்திட்டத்தை உருவாக்க வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்மூலம் தமிழர்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியும் என மத்திய அரசு கருதுகிறது.

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை தமிழர் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவை பெறமுடியும் என மத்திய அரசு கருதுகிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையில் மத்திய அமைச்சரவையில் உள்ள தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் பிரதமர் இலங்கைக்கு செல்ல கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கருத்து தெரிவிக்க பாரதிய ஜனதா மறுத்துள்ளது. பாரதிய ஜனதாவின் தேசிய பொதுசெயலாளர் முரளிதர்ராவ் இலங்கை பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறினார்.

எனினும் இலங்கை பயணத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பொறுத்தே கருத்து தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.