முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அவசர அவசரமாக திறப்பு

Written by vinni   // November 6, 2013   //

45தஞ்சை விளார்சாலையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

எம். நடராஜன் தலைமை தாங்கினார். முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் நுழைவு வாயிலில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் வளாகத்தில் உள்ள தமிழ்தாய் சிலைக்கு மாலை அணிவித்தார். இதனை தொடர்ந்து பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா தோழமை கட்சியினர், மக்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. ஆனாலும் வழக்கம் போல் 8, 9, 10ஆம் திகதிகளில் விழா நடைபெறும்.

8–ந் திகதி மாலை 5 மணிக்கு விழா தொடங்குகிறது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் உள்ள முத்துக்குமார் திடல் பாலச்சந்திரன் அரங்கில் விழா நடைபெறும்.

விழாவில் அழைப்பு விடுத்துள்ள அனைத்து தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக உலக தமிழர் உதவியுடன் இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் வேலை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இது யாருக்கும் எதிரானது அல்ல. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் தமிழர்களின் ஒப்பற்ற கலைக்கோவில். இதனை சிலர் இடிக்க, தகர்க்க வேண்டும் என்று ஈடுபட்டனர்.

மத்திய உளவு துறை பொலிசார் இந்த முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனை யார் தடுக்க நினைத்தாலோ, இடிக்க நினைத்தாலோ அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் உலக தமிழர்கள் வந்து வழிபட்டு செல்லும் புனித இடமாக செயல்படும். தமிழர்களின் நினைவு இடமாக விளங்கும். ஈழத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அவர்களது நினைவு சின்னமாக இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் செயல்படும்.

இலங்கையில் நடைபெற்ற போரை கண்டித்து தமிழகத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட 20 பேர் தீக்குளித்து இறந்தனர். அவர்களின் நினைவு சின்னமாக விளங்கும்.

இதனை இடிக்க நினைத்தால் முள்ளி வாய்க்காலில் இறந்தவர்கள் ஆன்மா, முத்துக்குமார் ஆன்மா மன்னிக்காது. மத்திய அரசு தமிழர்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு பழ. நெடுமாறன் கூறினார்.


Similar posts

Comments are closed.