ராகுல் காந்தியை இடைமறித்து ஆவேசமாக பேசிய பஞ்சாயத்து தலைவர்

Written by vinni   // November 6, 2013   //

Rahul-Gandhi1காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்முவில் இன்று பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். உள்ளூர் தலைவர்களுக்கான அதிகாரம் பற்றி ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது, பஞ்சாயத்து தலைவர்கள் மத்தியில் இருந்து ஆட்சேபனை மற்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

“நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். ஆனால் எங்களது உரிமையை கேட்டு மாநில அரசிடம் வலியுறுத்துகிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகாரம் தொடர்பாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. இது எல்லாம் மோசடி. நாங்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை” என்று கூட்டத்தில் இருந்த ஒரு பஞ்சாயத்து தலைவர் பரிக்சித் சிங் ஆவேசமாக பேசினார். இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தனது பேச்சை பாதியில் நிறுத்திய ராகுல் காந்தி, “உங்களுடைய குறைகளை கேட்பதற்காகவே நான் வந்திருக்கிறேன். கேட்க விரும்பவில்லை என்றால் நான் ஏன் இங்கு வரவேண்டும்? நீங்கள் போராடுங்கள். அதிகாரம் கேட்டு மாநில அரசுக்கு அழுத்தம் கொடுங்கள். உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என்று பதில் அளித்தார்.

ராகுல் காந்தியின் பேச்சை இடைமறித்து பேசிய ராம்நகர் பஞ்சாயத்து தலைவரான பரிக்சித் சிங், கூட்டம் முடிந்ததும் விளக்கம் அளித்தார். அப்போது, “எங்கள் பஞ்சாயத்து தலைவர்களில் பலர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவருக்கும் பாதுகாப்பு இல்லை. ஆனால் எம்.எல்.ஏ.வுக்கு மட்டும் 50 வீரர்கள் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் எங்கள் கோரிக்கையை ராகுல் காந்தியின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை” என்று தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.