மோடிக்கு பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வழங்கவேண்டும்

Written by vinni   // November 6, 2013   //

narendra-modiகுஜராத் முதல் மந்திரியான நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வ்ருகிறார். சமீபத்தில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு மைதானத்திலும், வெளியிலும் 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.   இதனால், பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) கமாண்டோ வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமி சென்ற வாரம் கோரிக்கை விடுத்தார்.

தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த பாதுகாப்பை வழங்குமாறு சிறப்பு பாதுகாப்பு படை குறித்த சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.   அதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்கு ஏற்கனவே போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, எனவே அவருக்கு சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அவசியமில்லை என்று கூறினார்.

இந்நிலையில் இன்று டெல்லியில் கூடிய பாரதிய ஜனதாவின் பாராளுமன்ற குழு, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறித்து தீர்மானங்கள் வெளியிட்டுள்ளது. அதில், நரேந்திர மோடிக்கு, சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பு வழங்க வேண்டும். மோடிக்கு பாதுகாப்பு வழங்குவது, மத்திய அரசின் பொறுப்பாகும். எனவே பிரதமருக்கு இணையான பாதுகாப்பை மோடிக்கு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தது.   தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோ பிரிவு வீரர்களின் 24 மணி நேர இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்க முன்னதாகவே மோடி ஒத்துக்கொண்டிருக்கிறார். சிறப்பு பாதுகாப்பு படை சட்டப்படி, நாட்டின் பிரதமருக்கோ, முன்னாள் பிரதமருக்கோ அல்லது அவர்கள் குடும்பத்தின் நெருக்கமானவர்களுக்கோ இந்த சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.