எனக்கு விசா தர இலங்கை வெளிப்படையாக இணங்கிவிட்டது – கல்லம் மெக்ரே

Written by vinni   // November 6, 2013   //

callum-macrae-channel-4இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டு தமிழர் பிரச்சினை குறித்து உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சனல் 4 ஊடகவியலாளர் கல்லம் மெக்ரேவிற்கு இலங்கை வர விசா வழங்கப்பட்டுள்ளது.

கல்லம் மெக்ரேவிற்கு விசா வழங்கப்பட்டுள்ளதை ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் அத தெரணவிடம் உறுதி செய்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்ற மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் ´இலங்கையின் கொலைக்களங்கள்´, ´யுத்த சூனிய வலயம்´, ´இலங்கையின் கொலைக்களங்கள் தண்டிக்கப்படாத குற்றங்கள்´ போன்ற ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டவர் கல்லம் மெக்ரே ஆவார்.

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இந்த ஆவணப்படங்களால் இலங்கைக்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்ததுடன் சுயாதீன யுத்தக்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தவும் அது உந்துசக்தியாக அமைந்தது.

இதேவேளை, இந்தியாவிற்கு விஜயம் செய்யவென விசாவிற்கு விண்ணப்பித்திருந்த போதும் விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கல்லம் மென்ரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கல்லம் மெக்ரேவிற்கு ´தாஜ்மகால் பார்வையிட முடியாது ஆனால் இலங்கையில் சிகிரியா பார்வையிட முடியும்´ என நியூ சவுத்வேல்ஸ் – குயின்ஸ்லேன்டுக்கான இலங்கை தூதுவர் பந்துல ஜயசேகர தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்துள்ளார்.

எனினும் இந்திய விசாவுக்கு தொடர்ந்தும் தாம் முயற்சித்துக் கொண்டிருப்பேன் என்று இங்கிலாந்தின் சனல் 4 ஆவணப்பட இயக்குநர் கல்லம் மெக்ரே தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வருகிறார் கல்லம் மெக்ரே.

டெல்லியிலும் தமது ஆவணப்படத்தை நாளை (07) திரையிட அவர் திட்டமிடிருந்தார். ஆனால் இந்திய விசா அவருக்கு கிடைக்கவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கல்லம் மெக்ரே, இந்தியாவில் நவம்பர் 7-ம் திகதியன்று எனது ஆவணப்படத்தை வெளியிடுவதற்காக விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தேன். இதுவரை எனக்கு விசா கிடைக்கவில்லை. கடந்த 8 மாதங்களுக்கு முன்பே நான் விசா கோரி விண்ணப்பித்தேன். இலங்கை போர்க்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக இந்தியா கவலை கொண்டிருக்கலாம் என்பதை நான் அறிவேன்.

கடந்த 3 ஆண்டுகாலமாக இது தொடர்பாக நாங்கள் திரட்டியிருக்கும் ஆவணபடங்களை வெளியிட ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் எனது பாஸ்போர்ட்டை கொடுத்திருந்தேன்.

விசா விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பலமுறை இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டேன். அங்குள்ள அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. அத்துடன் இது தொடர்பாக இந்திய தூதரகத்துக்கு மின் அஞ்சல்களையும் அனுப்பியிருக்கிறேன்.

இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு 2 கடிதங்களையும் அனுப்பி வைத்திருக்கிறேன். நான் ஆவணப்படங்களை வெளியிடுவதை இலங்கை தடுக்க முயற்சித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்கூட ஆவணப்பட திரையிடலுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது.

மலேசிய அரசுக்கும் இலங்கை அழுத்தம் கொடுத்தது. இதனால் ஆவணப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்த மனித உரிமைகள் ஆர்வலர் லேனா ஹென்ட்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் இந்தியாவுக்கும் இலங்கை அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று விரும்புகிறேன். காமன்வெல்த் நாடுகளின் நெருக்கடியால் இலங்கை எனக்கு விசா தர வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் இந்திய விசாவுக்காக முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.


Similar posts

Comments are closed.