இங்கிலாந்தில் பணிபுரியும் மருத்துவர்களில் 10-ல் ஒருவர் இந்தியர்: ஆய்வில் தகவல்

Written by vinni   // November 5, 2013   //

INDIA-CHILD-HEALTH-ILLNESS-HYDROCEPHALUSஇங்கிலாந்தில் நேற்று வெளியிடப்பட்ட மருத்துவத்துறை ஆய்வு ஒன்றின்படி அங்கு பணிபுரியும் மருத்துவர்களில் 25, 295 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. அங்குள்ள மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது பத்தில் ஒருவர் இந்தியராக இருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் இந்தியாவில் தங்கள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இங்கிலாந்தில் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இங்கிலாந்தின் மருத்துவத்துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது. பொது மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்றுள்ள இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் ஐரோப்பா தவிர்த்த மற்ற நாடுகளில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர். மருத்துவக் கல்வி முடித்து இங்கிலாந்து, ஐரோப்பா என்று சர்வதேச நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது.

இந்தியாவின் திட்டக் கமிஷன் அறிக்கை வெளியீட்டின்படி இங்கு 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதமே காணப்படுகின்றது. ஆனால், உலக அளவில் இந்தக் கணக்கீடு 1.5:1000 என்ற அளவில் உள்ளது.

சீனாவில் 1063 பேருக்கு ஒருவரும், கொரியாவில் 1:951 என்ற விகிதத்திலும், பிரேசிலில் 1:844 என்ற விகிதத்திலும், ஜப்பானில் 1;606 என்ற விகிதத்திலும், இங்கிலாந்தில் 1:469 என்ற விகிதத்திலும், அமெரிக்காவில் 1:350 என்ற விகிதத்திலும், ஜெர்மனியில் 1: 296 என்ற விகிதத்திலும் மருத்துவர்கள் உள்ளனர்.

உலக அளவிலான மருத்துவர்களின் எண்ணிக்கையில் 5 சதவிகிதத்தினர் இந்தியர்களாக இருக்கின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.

சிறந்த உட்கட்டமைப்பு, பயிற்சி முறைகள் மற்றும் அதிகமான ஊதியம் போன்றவை மருத்துவக்கல்வி மாணவர்களை வெளிநாடுகளுக்கு ஈர்க்கின்றன.

ஆனால், உள்நாட்டின் தேவைகள் அதிகரித்துவரும்போது இவ்வாறு தீவிர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களை விமர்சகர்கள் கண்டிக்கின்றனர்.


Similar posts

Comments are closed.