ஈரான் சிறையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

Written by vinni   // November 5, 2013   //

prison-imageஈரான் சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தங்களது மருத்துவ உரிமைகள் மறுக்கப்படுவதால் உண்ணாவிரதம் இருப்பதாக மனித உரிமைகள் சர்வதேசக் கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் சர்வதேசக் கூட்டமைப்பு, மனித உரிமைகள் பாதுகாவலர் மையம் மற்றும் ஈரானின் மனித உரிமைக்குழு ஆகிய மூன்று அமைப்புகளும் ஒருங்கிணைந்து நேற்று இந்த எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானின் எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை வழக்கறிஞரான அப்டோல்பட்டா சொல்தானி சென்ற ஒன்றாம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.சிறையில் நோயுற்றிருந்த ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு மருத்துவ உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்து அவர் இந்த செயலில் இறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து தெஹ்ரானுக்கு மேற்கே கராஜ் நகரத்தில் உள்ள ரஜைசாகர் சிறையில் 80க்கும் மேற்பட்ட கைதிகள் மூன்று நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கியதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவஉதவி தேவைப்படும் கைதிகளை மருத்துவமனைகளுக்கு மாற்றும்போது பாதுகாப்பு படையினரின் குறுக்கீடு குறித்தும், மருத்துவ கட்டணங்கள் அதிகரிக்கும்போது அதனை செலுத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பது குறித்தும் இந்தக் கைதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு முன்னர் சிறையில் அனுபவிக்கும் கொடுமையான சித்திரவதைகள், நியாமற்ற விசாரணைக்குப் பின்னர் கிடைக்கும் தண்டனைகளுடன் சேர்த்து இதுபோன்ற மருத்துவ உதவிகளும் மறுக்கப்படுவதாக கைதிகள் குறிப்பிட்டனர்.

இந்தப் புறக்கணிப்பின் விளைவாக சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட மனசாட்சிக் கைதிகள் இறந்துள்ளதாக 2003ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், மனித உரிமைகள் பாதுகாவலர் அமைப்பின் தலைவருமான ஷிரின் எபாடி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் ஈரானிய அதிகாரிகள் அமைதியாக கைதிகளின் மரணத்தை உருவாக்கி வருவதாக தலைமறைவாக உள்ள மற்றொரு மனித உரிமை வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளதையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

ஈரானில் அரசியல் கைதிகளின் நிலையில் மனித உரிமைகள் மீறப்படுவதை குறித்து தங்களின் கவலையை சர்வதேச சமூகம் ஐ.நா அமைப்பின் தீர்மானத்தில் வாக்களித்து வெளிப்படுத்தவேண்டும் என்று மனித உரிமைக் கழகங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.


Similar posts

Comments are closed.