இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் : தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்

Written by vinni   // November 5, 2013   //

sampanthanஇசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். எனவே, உரிய விசாரணைகளை முன்னெடுத்து அதைச் செய்யவேண்டியது இலங்கை அரசின் கடமையாகும். இதைத் தட்டிக்கழித்தால் பாரதூரமான விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.’

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றுத் தெரிவித்தார்.இசைப்பிரியா தொடர்பில் சனல்4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொலியை இலங்கை அரசும் இராணுவமும் நிராகரித்துள்ளன.
இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.சனல்4 வில் இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் வெளிவந்த காட்சிகள் அனைத்தும் உண்மையானவை என்று அதனை பார்த்த அனைவரும் கூறுகின்றார்கள். இந்தியா உட்பட சர்வதேச  நாடுகள் இந்த கொடூரத்தை வன்மையாகக்  கண்டித்துள்ளன. எனவே, சனல்4 வெளியிட்ட காணொலியை போலி என கூறி அரசு நிராகரிக்க முடியாது. இது சனல் 4 விடயமல்ல, இசைப்பிரியா படுகொலை விடயம் என்பதை அரசு மனதில் கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்; உண்மைகள் கண்டறியப்படவேண்டும்; இது இலங்கை அரசின் கடமையாகும். இதை தட்டிக்கழித்தால் பாரதூரமான பின்விளைவுகளை இலங்கை அரசு சந்தித்தே தீரும்.நாட்டில் மனித உரிமைகள், சட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று இலங்கை அரசு கூறுகின்றது. இது உண்மையானால் இசைப்பிரியா வின் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்திய உண்மையை கண்டறிய வேண்டும்.
அரசு ஏன் இதற்கு தயக்கம் காட்டுகின்றது? இந்தப் படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கைப் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, இசைப்பிரியாவின் குடும்பத்தினருக்கும் தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இதிலிருந்து அரசு தப்பவே முடியாது” என்றும் அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.