முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்துக்கு சுடர் ஏந்திச் சென்றவர்கள் கைது

Written by vinni   // November 4, 2013   //

18முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் தஞ்சாவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள நினைவேந்தல் முற்றத்துக்கான நினைவுச் சுடர் பயணத்தில் ஈடுபட்டவர்களை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களை நினைகூறும் வகையில் தஞ்சையை அடுத்துள்ள விளார் என்ற இடத்தில் நினைவேந்தல் முற்றம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்து எதிர்வரும் 8ஆம் திகதி அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முயற்சியில் அமைக்கப் பெற்றுள்ள இந்த நினைவிடத்திற்கு நினைவுச் சுடரை கொண்டு செல்லும் பயணம் இன்று ஆரம்பமானது. இந்த சுடர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நினைவிடம் அமைந்துள்ள இடத்திற்கு 8ஆம் திகதி கொண்டு செல்லப்படும்.

இந்த சுடரை பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு ஆகியோர் பெற்றுக்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் இலங்கைக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பயணத்தை ஆரம்பித்து வைத்தார். அதேபோல், நீலகிரி, விருதுநகர், இடிந்தகரை உள்ளிட்ட 4 இடங்களில் இருந்து நினைவுச் சுடர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி இன்று இடிந்தகரையில் ஆரம்பமானது. இடிந்தகரையில், பெ.மணியரசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சுப.உதயகுமார் சுடர் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

இடிந்தகரையில் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு ஊர் எல்லை வரை நடை பயணமாக வந்து வழியனுப்பி வைத்தனர். சுடர் பயணம் நெல்லை மாவட்டத்தைக் கடந்து குமரி மாவட்ட எல்லையில் உள்ள சின்னமுட்டம் பொலிஸ் காவலரணில் வைத்து பொலிஸாரால் நிறுத்தப்பட்டது.

பின்னர் சுடரை ஏந்திச் சென்ற 9 பேரை பொலிஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்தனர். தமிழகத்தில் 4 இடங்களிலும் இதேபோல் சுடர் ஏந்திச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது


Similar posts

Comments are closed.