ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு “மங்கள்யான்’ விண்கலம்

Written by vinni   // November 4, 2013   //

pslvசெவ்வாய் கிரகத்துக்கு “மங்கள்யான்’ விண்கலத்தை ஏவுவதற்கான கவுன்ட்-டவுன், திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை (நவ.3) காலை 6.08 மணிக்குத் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்த விண்கலம் பி. எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை (நவ.5) பிற்பகல் 2.36 மணிக்கு ஏவப்பட உள்ளது. இஸ்ரோ சார்பில் முதன்முறையாக மொத்தம் ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு இந்த விண்கலம் ஏவப்படுவது குறிப்பிடத்தக்கது.

இயல்பான வானிலை: இன்னும் இரண்டு நாள்களுக்கு விண்கலத்தை ஏவும் வகையில் வானிலை இயல்பானதாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியதால் 56 1/2 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டுள்ளது; செவ்வாய் விண்கலத்தை ஏவுவதற்கான பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன என்று விண்வெளி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் எரிபொருள்: விண்கலத்தை ஏவுவதற்கு 32 டன் எடை கொண்ட 44 அடி உயர பிரம்மாண்டமான பிஎஸ்எல்விசி25 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ராக்கெட்டில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன. முதல் நிலை திட எரிபொருள் நிலை, இரண்டாவது திரவ எரிபொருள், மூன்றாவது உயர் ரக திட எரிபொருள் மற்றும் நான்காவது நிலையில் திரவ எரிபொருள் இருக்கும். மொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டில் நான்காவது நிலையில் திரவ எரிபொருள் நிரப்பும் பணி ஞாயிற்றுக்கிழமை (நவ.3) மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இரண்டாவது நிலைக்கு திரவ எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்ட்ரேப்-ஆன் மோட்டார்கள்: இந்த செயற்கைக்கோளில் 6 ஸ்ட்ரேப்-ஆன் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்கள் வழக்கத்தை விட 3 மீட்டர் உயரமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தப்படுவதால் மற்ற பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைப் போல இல்லாமல், இந்த ராக்கெட் விண்ணில் 44 நிமிஷங்கள் (2,657 விநாடிகள்) பயணிக்கும். இந்த ராக்கெட் 44 நிமிஷங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து பூமிக்குக் குறைந்தபட்சம் 250 கிலோமீட்டர், அதிகபட்சம் 23,500 கிலோமீட்டர் தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலைநிறுத்தும்.

நோக்கம் என்ன? செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா, அதன் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் ஏவப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மீத்தேன் சென்சார்கள், அங்குள்ள மேற்பரப்பை படம் பிடிக்கும் கேமரா, கனிம வளத்தை ஆய்வு செய்ய தெர்மல் இன்ஃபிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர், வளிமண்டலத்தை ஆய்வு செய்ய லிமான் ஆல்பா போட்டோமீட்டர், கம்போசிஷன் அனலைசர் போன்ற கருவிகள் மங்கள்யான் விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளன. இதன் மொத்த எடை 1,340 கிலோ ஆகும்.

அடுத்த ஆண்டு செப்டம்பரில்... இந்த விண்கலத்தின் பாதை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு 12.42 மணிக்கு செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும்.

280 முதல் 300 நாள்கள் பயணித்து இந்த விண்கலம் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.


Similar posts

Comments are closed.