செனல்4 ஊடகத்தின் புதிய ஆவணப்படம் போலியானது – இராணுவம்

Written by vinni   // November 3, 2013   //

channel4_01செனல்4 ஊடகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் போலியானது என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா விசாரணைக்கு படையினரால் அழைத்துச் செல்லப்படுவதாகவும் பின்னர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாகவும் செனல்4 ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செனல்4 ஊடகம் பல்வேறு ஆவணப்படங்களை வெளியீடு செய்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகள், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை இலக்கு வைத்து போலி ஆவணப்படங்களை வெளியிட்டு நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதனை செனல்4 ஊடகம் வழக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத ஆவணப்படமொன்றை இந்த தடவையும் செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

செனல்4 ஊடகத்திற்கு மெய்யாகவே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கரிசனை இருந்தால், முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் காலங்களில் மட்டும் ஆவணப்படங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தக் கூடிய அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், வெறுமனே குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனால் எவ்வித பயனும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் மீளவும் செனல்4 ஊடகம் ஆவணங்களை வெளியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போதும் செனல்4 ஊடகம் இவ்வாறான ஆவணங்களை வெளியீடு செய்யக் கூடுமெனவும் அவ்வாறு வெளியீடு செய்தாலும் ஆச்சரியப்படப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.