இந்தியாவின் திட்டத்தை நிராகரித்தது சிறிலங்கா

Written by vinni   // November 3, 2013   //

sri-lanka-india-flagதமிழ்நாடு மீனவர்களை வாரத்தில் ஒருநாள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பாக, இந்தியா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து விட்டது.

சிறிலங்கா கடற்றொழில் அமைச்சு அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, இந்தியத் தூதரக அதிகாரிகளால் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.

புதுடெல்லியின் இந்தத் திட்டம் குறித்து, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவோ, இந்தியத் தூதரக அதிகாரியோ கருத்து வெளியிட மறுத்து விட்டனர்.

தற்போது, தமிழ்நாட்டு மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மீன்பிடிப் பிரச்சினை தொடர்பாக, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மற்றும் சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் உள்ளடக்கிய கூட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யும்படி கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, சிறிலங்கா அதிபர் பணித்திருந்தார்.

இந்தக் கூட்டம் இன்னமும் நடத்தப்படாத நிலையில், அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளூர் மீனவர்களுடன் இந்தியத் திட்டம் குறித்து விவாதித்துள்ளதாகவும், அதனை அவர்களை விரும்பவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசியல்வாதிகளின் அழுத்தங்களில் இருந்து விடுபடவே, புதுடெல்லி அரசாங்கம், இந்த திட்டத்தை முன்வைத்ததாக, இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவின் இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டை சிறிலங்கா எடுத்துள்ளது.

வாரத்தில் ஒரு நாள் தமிழ்நாடு மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்தால், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் பாதிக்கப்பட்டு விடும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.


Similar posts

Comments are closed.