நாம் நேசக் கரத்தை நீட்டியுள்ளோம் முடிவெடுக்க வேண்டியது அரசுதான்: சம்பந்தன்

Written by vinni   // November 3, 2013   //

Sampanthar-Mahinthar-150-newsவட மாகாண சபைத்தேர்தலின் பின் நாங்கள் நல்ல சமிஞ்ஞையை அரசாங்கத்துக்கு காட்டியுள்ளோம். நேசக்கரத்தை நீட்டியுள்ளோம். முடிவு எடுக்க வேண்டியது இனி அரசாங்கமே. இருந்த போதிலும் அண்மைக் காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலைமை உண்மையான விசுவாசமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் அளித்த விசேட பேட்டியில் தொடர்ந்து கூறியதாவது,

மக்களுடைய ஜனநாயக தீர்வை மதித்து நடக்க வேண்டியது எந்த ஒரு அரசாங்கத்தினதும் கடமையென்று நாம் கருதுகின்றோம். இன்று ஆட்சியிலுள்ள அரசாங்கம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் ஆட்சி நடைபெறுகின்றது.

அவர்களுக்கு தற்போது உள்ள அந்தஸ்து மக்களின் ஆதரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருந்தாலென்ன அமைச்சர்களாக இருந்தாலென்ன எந்தப் பதவியில் இருந்தாலென்ன இது தான் உண்மை.

மக்களின் ஆணையின் அடிப்படையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் வடக்கு மாகாணத்து மக்கள் பெரும்பான்மையாக அளித்த ஆணையை மதிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த விடயத்தில் அரசாங்கம் தனது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் செயற்பட முடியாது.

இறமை மக்களுக்குரியது. அந்த இறைமையின் நிமித்தம் மக்கள் ஜனநாயக தீர்வை அளித்திருக்கின்றார்கள். அந்த தீர்வை அவர்கள் மதிக்க வேண்டும். மதிக்கா விட்டால் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சியை நடத்துவதற்கு அவர்கள் விரும்புவதாக முடிவு எடுக்க நேரிடும். அது ஒரு நல்ல விடயமல்ல.


Similar posts

Comments are closed.