கிண்ணம் யாருக்கு? இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை

Written by vinni   // November 2, 2013   //

India-Vs-Australia-2013-ODI-T20-Ticketsஇந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் மோதும் ஏழாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடக்கிறது.
இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஆறு போட்டிகளின் முடிவில் 2-2 என, இரு அணிகளும் சமமாக உள்ளன.

இரு அணிகள் மோதும் கடைசி மற்றும் ஏழாவது ஒருநாள் போட்டி, இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தை பொறுத்தவரையில் வலுவாகத்தான் உள்ளது.

ரோகித் சர்மா (282), ஷிகர் தவான் (224 ரன்) இருவரும் அணிக்கு சிறப்பான துவக்கம் தருகின்றனர். அடுத்து வரும் விராத் கோஹ்லியும் (344), அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். இவரது பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடரும் பட்சத்தில் இந்திய அணி கோப்பை கைப்பற்றுவது எளிதாகலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் புதிய களத்தடுப்பு விதிகளால், எப்படி விக்கெட் வீழ்த்துவது என்பதை மறந்து, ஓட்டங்களை கட்டுப்படுத்துவது எப்படி என்று தான் யோசிக்க வேண்டியதுள்ளது.

ஏனெனில், இதுவரை நடந்த போட்டிகளில் 304, 359, 303, 295, 350 என, ஓட்டங்களை வாரி வழங்கினர். இஷாந்துக்கு மாற்றாக வந்த ஷமி, வினய் குமாருக்குப் பதில் களமிறங்கிய அமித் மிஸ்ராவும் (10 ஓவரில், 78 ரன்கள்) ஏமாற்றம் தருவது சிக்கல்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில், 29 விக்கெட் வீழ்த்தியவர் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இப்போது துடுப்பாட்டத்திற்கு சாதமான ஆடுகளத்தில் நிறைய தடுமாறுகிறார். இவருக்கு, ரவிந்திர ஜடேஜா ஆறுதல் தரவேண்டும்.

சமீபத்தில் டெஸ்ட் தொடரில் 0-4 என, இழந்த அவுஸ்திரேலிய அணி, இம்முறை இளம் படையுடன் வலுவாக வந்து, எதிர்பார்ப்புக்கு மாறாக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது.

துவக்க வீரர்கள் பின்ச், ஹியுஸ் ஆகியோர் அசத்துகின்றனர். கடந்த போட்டியில் சதம் அடித்து “பார்மை’ மீட்டுள்ள வாட்சன், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்களை (474) எடுத்த முதல் தலைவர் என்ற பெருமை பெற்ற ஜார்ஜ் பெய்லியை கட்டுப்படுத்தினால், ஸ்கோரை குறைக்கலாம். ஏனெனில், பின் வரிசையில் மேக்ஸ்வெல், வோஜஸ், பால்க்னர் வரை ரன் சேர்க்கின்றனர்.

இந்திய அணிக்கு பெரும் தொல்லை கொடுத்த மிட்சல் ஜான்சன் இல்லாதது சற்று பலவீனம் தான். எனினும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் “கஞ்சத்தனமாக’ ஓட்டங்களை விட்டுக் கொடுத்த கூல்டர் நைல் மிரட்டலாம்.

மற்றும், மக்காய், பால்க்னர் தொல்லை தர முயற்சிக்கலம். 5 போட்டியில் 36 ஓவர்கள் வீசிய பின்பும், இன்னும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத, சுழற்பந்து வீச்சாளர் தோகர்டி, பல் இல்லாத பாம்பு போல உள்ளார்.

இன்று வெல்லும் அணிக்கு கோப்பை கிடைக்கும் என்பதால், இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன.


Similar posts

Comments are closed.