அடைக்கலம் புகுந்த ஸ்னோடெனுக்கு வேலை அளித்துள்ள இணையதள நிறுவனம்

Written by vinni   // November 1, 2013   //

Tamil-Daily-News_3597223759அமெரிக்காவின் புலனாய்வுத்துறையில் தொழில்நுட்ப ஒப்பந்ததாரராக பணிபுரிந்த எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்கா மற்ற நாடுகளைப் வேவு பார்ப்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்ததால் அமெரிக்க அரசின் கண்டனத்துக்கு ஆளானார்.

உயிருக்கு பயந்து அவர் மற்ற நாடுகளில் புகலிடம் தேடி அலைந்து இறுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் தற்காலிக அனுமதி பெற்று அந்நாட்டின் உள்ளே நுழைந்தார். தற்போது மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் ஸ்னோடெனுக்கு இணையதள நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளதாக அவரது வக்கீல் நேற்று அறிவித்துள்ளார்.

இன்று முதல் பெரிய ரஷ்யன் நிறுவனம் ஒன்றில் ஸ்னோடென் வேலை செய்ய இருப்பதாகவும், பிரதானமாக உள்ள ரஷ்யன் வலைத்தளம் ஒன்றினை மேம்படுத்தும் பணியில் அவர் ஈடுபட உள்ளதாகவும் அவரது வக்கீல் அனடோலி குச்சரீனா தெரிவித்துள்ளார். ஆயினும் பாதுகாப்புக் காரணம் கருதி அவர் நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை.

அமெரிக்காவின் பேஸ்புக்கிற்கு இணையாகக் கருதப்படும் கோன்டக்டே நிறுவனத்தின் தலைவரான பவெல் டுரோவ் கடந்த ஆகஸ்ட் மாதமே ஸ்னோடெனுக்கு வேலை தருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அதனால் இந்த நிறுவனமே தற்போது ஸ்னோடெனை பணியில் அமர்த்தியிருக்கக்கூடும் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த நிறுவனத்தின் பத்திரிகைத் தொடர்பாளரான ஜார்ஜி லோபுஷ்கின் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

அந்நாட்டிலுள்ள மற்ற இரண்டு பெரிய இணையதள நிறுவனங்களும் ஸ்னோடெனைப் பணியில் அமர்த்தவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவில் புகலிடம் கிடைத்ததைத் தொடர்ந்து ஸ்னோடென் தலைமறைவாகவே வாழ்ந்தது வருகின்றார். ஸ்னோடெனின் வக்கீல் தன்னுடைய பேட்டிகளில் அவருடைய பணத்தேவையைப் பற்றிக் குறிப்பிட்டு வந்தார். இதுவரை, அவரது ஆதரவாளர்கள் இணையதளம் மூலம் 49,000 டாலர் நன்கொடை திரட்டி அளித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.