இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை அமெரிக்க நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Written by vinni   // October 31, 2013   //

amaricaஇலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இலங்கைத் தமிழரும் கனேடிய பிரஜையுமான சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற இளைஞருக்கு தண்டனை விதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் கோரியுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை அமெரிக்காவின் புருக்லைன் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப மென்பொருள் கொள்வனவு, ஆயுதக் கொள்வனவு மற்றும் சட்டவிரோத நிதி திரட்டல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஸ்ரீஸ்கந்தராஜா மீது சுமத்தப்பட்டிருந்தது. தாம் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் ஒப்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான சமாதானத்தை எட்டக் கூடிய வகையில் மெய்யான நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஸ்ரீஸ்கந்தராஜா பகிரங்கமாக கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கடிதம் ஊடாக அமெரிக்க நீதிமன்றிடம் கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளதுடன், அவருக்கு இரண்டாண்டு காலத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 28ம் திகதி தண்டனை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவளித்தவர்களுக்கு அமெரிக்க சட்டத்தின் அடிப்படையில் பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் புலிகளுக்கு இவர் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றம் கவனத்திற் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாகவே ஸ்ரீஸ்கந்தராஜாவிற்கு குறைந்தபட்ச அதாவது இரண்டாண்டுகால தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.