செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் இந்திய விண்கலம்: இன்று பரீட்சார்த்த நடவடிக்கை

Written by vinni   // October 31, 2013   //

marsசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று வியாழக்கிழமை ஒத்திகை பார்க்கப்பட உள்ளது.
ராக்கெட்டை விண்ணில் ஏவுதற்கான பட்டனை அழுத்துவதைத் தவிர அனைத்து நடைமுறைகளும் இந்த ஒத்திகையில் மேற்கொள்ளப்படும் என பி.எஸ்.எல்.வி. சி-25 திட்ட இயக்குநர் பி.குன்னிகிருஷ்ணன் கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா, அதன் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) நவம்பர் 5-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ உள்ளது.

பி. எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளது. இதற்கான 56 மணி நேர 30 நிமிட கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 6.08 மணிக்குத் தொடங்க உள்ளது.

இஸ்ரோ சார்பில் முதன் முதலாக வேற்று கிரகத்துக்கு ரூ.450 கோடி செலவில் விண்கலம் அனுப்பப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

44 மீட்டர் உயரத்தில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகப்பிரம்மாண்டமாக உள்ளது. இந்த ராக்கெட் விண்ணில் பாயும்போது 320 டன் எடையிருக்கும். இந்த ராக்கெட்டில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன.

இதில் 6 ஸ்ட்ரேப்-ஆன் மோட்டார்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தப்படுவதால் மற்ற பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைப் போல இல்லாமல், இந்த ராக்கெட் விண்ணில் 44 நிமிடங்கள் (2,657 விநாடிகள்) பயணிக்கும் என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் நிருபர்களிடம் கே.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியது: இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து பூமிக்குக் குறைந்தபட்சம் 250 கிலோமீட்டர், அதிகபட்சம் 23,500 கிலோமீட்டர் தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் மங்கள்யானை நிலை நிறுத்தும்.

இந்த விண்கலத்தின் பாதை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு 12.42 மணிக்கு செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தப்படும். 280 முதல் 300 நாள்கள் பயணித்து இந்த விண்கலம் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிரகத்துக்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றார் அவர்.

இந்த ராக்கெட் மிக நீண்ட நீள்வட்டப் பாதையில் செலுத்தப்படுவதால் செலுத்தப்பட்ட பிறகு 10 நிமிடங்கள் வரை ராக்கெட்டை கண்காணிக்க முடியாது. விண்கலத்திலிருந்து வரும் சிக்னல்களைப் பெறுவதற்காக போர்ட்பிளேர், புருணே, பெய்க் ஆகிய இடங்களில் டெலிமிட்ரி ரிசீவர்களும் தென் பசிபிக் கடலில் 2 கப்பல்களில் ரிசீவர்களும் நிறுவப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.

சந்திரயானில் நடைபெற்ற தவறுகள் இதில் இடம்பெறாத வண்ணமும், பிற நாடுகளின் செவ்வாய் கிரகத் திட்டங்கள், நீண்ட விண்வெளி பயணத்தில் சந்திக்கும் சவால்கள் ஆகியவற்றை மனதில்கொண்டு முடிந்தவரை சிறப்பாக இந்த விண்கலத்தை வடிவமைத்துள்ளதாக செவ்வாய் கிரக விண்கல (மங்கள்யான்) திட்ட இயக்குநர் அருணன் கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மீத்தேன் சென்சார்கள், அங்குள்ள மேற்பரப்பை படம் பிடிக்கும் கேமரா, கனிம வளத்தை ஆய்வு செய்ய தெர்மல் இன்ஃபிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர், வளிமண்டலத்தை ஆய்வு செய்ய லிமான் ஆல்பா போட்டோமீட்டர், கம்போசிஷன் அனலைசர் போன்ற கருவிகள் மங்கள்யான் விண்கலத்தில் அனுப்பப்பட உள்ளன. இதன் மொத்த எடை 1,340 கிலோ ஆகும்.

விண்கலத்தின் ஆயுள்காலம்:

இந்த விண்கலத்தின் ஆயுள்காலம் குறித்து இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, அதை உறுதியாகச் சொல்ல முடியாது. இந்த விண்கலம் அதற்கான பாதையிலிருந்து விலகாமல் எரிபொருளைச் சிக்கனமாக பயன்படுத்தினால் பல மாதங்கள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும். பாதை மாறினால் விண்கலத்தின் எரிபொருள் வீணாகி அதன் ஆயுள்காலம் குறையவும் வாய்ப்புள்ளது என்றார்.

இந்தியாவின் முதல் வேற்றுக்கிரக திட்டத்தைப் பொருத்தவரை செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக எடுத்துச்சென்றால் அதுவே பெரிய சாதனைதான். உலக அளவில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட 51 திட்டங்களில் 21 திட்டங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளன என்றார் ராதாகிருஷ்ணன்.

300 நாள்கள் நீண்ட பயணம்

* பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட்டுக்கான 56 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நவம்பர் 3-ம் தேதி காலை 6.08 மணிக்கு தொடங்குகிறது.
* நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவுதல்.
* டிசம்பர் 1-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை நோக்கி விண்கலம் பயணம்.
* 280 முதல் 300 நாள்கள் வரை இந்த விண்கலம் பயணிக்கும். பின்னர் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் விண்கலம் செலுத்தப்படும்.


Similar posts

Comments are closed.