சிங்களவர் சுயவிருப்பில் வடக்கில் குடியேறலாம் : அரசு அவர்களை குடியேற்ற முடியாது ‍- வாசுதேவ

Written by vinni   // October 30, 2013   //

vasudeva_n_bசிங்கள மக்கள் சுயவிருப்புடன் வடக்கில் குடியேறுவதைத் தடுப்பதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. ஆனால் அரசினால் சிங்கள மக்கள்  குடியேற்றப்படுவதை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள மக்கள் தமது வர்த்தகம் மற்றும் தொழில்கள் நிமித்தமும், சுய விருப்பத்துடனும் வடக்கில் குடியேறுவதைத் தடுப்பதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டை எதிர்க்கின்றேன். வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு நிலை உருவானால் தெற்கிலும் தமிழ் மக்கள் வந்து குடியேற முடியாது. அதற்கு இடமளிக்கமாட்டோம் என்று சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புத் தோன்றும் எனச் சுட்டிக்காட்டினார்.

இது மீண்டும் இனங்களிடையே முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். இனவாதத்திற்கு இது சாதமாகிவிடும். எனவே சிங்கள மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் வடக்கில் மட்டுமல்ல எங்கும் வாழ முடியும். அதே போன்றுதான் தமிழ் மக்களும் இதற்குத் தடைபோட எவருக்கும் அதிகாரம் இல்லை என்றார்.

வடக்கில் சிங்கள  மக்களை அரசின் தலையீட்டுடன் குடியேற்றுவதை எதிர்க்கின்றேன். வட பகுதியில் தமிழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இராணுவத்தினரின் நடமாட்டத்தை தடைசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் அவர்களுக்குரிய இடங்களில் இருக்க வேண்டும். அத்தோடு, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீட்டை இல்லாது செய்ய வேண்டும்.

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உளவுப் பிரிவினர் நடமாடலாம். ஆனால் இராணுவம் சீருடையுடன் மக்கள் மத்தியில் நடமாடுவதென்பது, மக்கள் மத்தியில் அச்சத்தையும், தாம் இராணுவமயமாக்கலுக்குள் சிக்கியிருக்கின்றோம் என்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

எந்தவொரு மாகாண சபை முதலமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே வடக்கு முதலமைச்சருக்கும் இதே நிலைதான். வடக்கு மாகாண ஆளுநராக சிவிலியன் ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் – என்றார்.


Similar posts

Comments are closed.