ரூ.70 கரண்ட் பில் ரூ.2 லட்சமானது எப்படி? விவசாயி அதிர்ச்சியில்

Written by vinni   // October 29, 2013   //

power cutதர்மபுரி மாவட்டத்தில் ரூ.70 மின் கட்டணம் செலுத்தி வந்த விவசாயிக்கு திடீரென ரூ.2 லட்சம் பில் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஆல்ட்ரிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னசாமி (40). விவசாயியான இவரது வீட்டில் ஒரு பேன், ஒரு தொலைக்காட்சி, 2 குண்டு பல்பு உள்ளது.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.70 செலுத்தி வந்துள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என விவசாயி சின்னசாமிக்கு மின் வாரிய கணக்கீட்டாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் வரும் நவம்பர் 10ம் திகதிக்குள் கட்டணம் செலுத்த வில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னசாமி மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டு, சாதாரண குடும்பத்தை சேர்ந்த எனக்கு மாதம்தோறும் ரூ.70க்கும் குறைவாகத்தான் மின் கட்டணம் வரும். தற்போது திடீரென லட்சக்கணக்கில் வந்துள்ளது என்றும் ஏதோ தவறு நடந்துள்ளது, எனவே இதை சரி செய்து நியாயமான கட்டணத்தை எனக்கு நிர்ணயிக்கவேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சின்னசாமி மட்டுமல்லாது அதே ஊரை சேர்ந்த பலருக்கும் ஆயிரக்கணக்கில் பில் வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து. டி.ஆர்.ஓ ராமரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.


Similar posts

Comments are closed.