தயாளு அம்மாளிடம் விசாரணை தொடங்கியது!

Written by vinni   // October 28, 2013   //

thayalu_enquiry_0022ஜி முறைகேடு தொடர்பாக திமுக. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடம் சென்னை எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி விசாரணையை தொடங்கியுள்ளார்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கொடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த வழக்கில் கலைஞர் தொலைக்காட்சியின் பிரதான பங்குதாரரான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

ஆனால் தயாளு அம்மாளின் உடல் நிலை சீராக இல்லாததால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தயாளு அம்மாளின் மகள் செல்வி மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் தயாளு அம்மாளின் உடல் நிலையைப் பரிசோதிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவை நியமித்து அனுப்பியது.

தயாளு அம்மாளைப் பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழு, டெல்லிக்குப் பயணம் செய்யும் நிலையில் அவரது உடல் நிலை தகுதியாக இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.

இதனைத் தொடர்ந்து தயாளு அம்மாளின் சாட்சியத்தை கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று பதிவு செய்யும்படி சென்னை, எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதியை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மாதம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, சென்னை, எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு சென்றார். அங்கு தயாளு அம்மாளிடம் விசாரணையை தொடங்கி சாட்சியத்தைப் பதிவு செய்து வருகிறார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா சார்பில் அவரது வழக்கறிஞர், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தயாநிதிமாறன், கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் சரத்குமார் மற்றும் கரீம் மொரானி, ஆசிப் பால்வா ஆகியோர் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கோபாலபுரம் இல்லத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.


Similar posts

Comments are closed.