புனே வாரியர்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கம்: பி.சி.சி.ஐ. நடவடிக்கை

Written by vinni   // October 26, 2013   //

pune-warriors_logoஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 2010–ம் ஆண்டில் சகாரா குழுமம் ரூ.1,702 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஆனால் அந்த ஆண்டு ஐ.பி.எல்.

போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தங்கள் அணிக்கான ஆண்டு கட்டணத்தை 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்று புனே வாரியர்ஸ் அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.

மேலும் ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணி தொடர ரூ.170.2 கோடியை வங்கி உத்தரவாத தொகையாக கட்ட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இது குறித்து பலமுறை ஞாபகப்படுத்தியும் சகாரா நிறுவனம் இந்த தொகையை கட்டவில்லை.

இதற்கிடையில் இந்த ஆண்டு மே 21–ந் தேதி ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி விலகுவதாக அந்த அணியின் உரிமையாளர் சுபத்ரா ராய் அறிவித்தார். ஆனால் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி கடிதம் அனுப்பவில்லை.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் புனே வாரியர்ஸ் அணி பிரச்சினை பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது நிலுவைத் தொகையை செலுத்தாததால் புனே அணியின் ஐ.பி.எல். ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.


Similar posts

Comments are closed.