கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் – மாவை சேனாதிராஜா

Written by vinni   // October 26, 2013   //

mavai-senathirajaகொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பொதுநலவாய நாடுகளின் பெறுமதிகளுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக செயற்படுகின்ற இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவது உசிதமில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

எனவே இந்த மாநாட்டை முற்றாக புறக்கணிக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்தனர். எவ்வாறாயினும் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது, இலங்கை வரும் வெளிநாட்டு அரச தலைவர்களை எதிர்ப்பதாக அமையாது என்றும், சந்தர்ப்பம் கிடைத்தால், வெளிநாட்டு தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சந்திப்பதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சந்தித்துள்ள மோசமான சூழ்நிலை, மனித உரிமை நிலவரங்கள், அரசியல் தீர்வு விடயங்கள் உள்ளிட்ட விடயங்களை கொண்ட ஆவனம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரித்து வருகிறது.

இந்த அறிக்கையை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வரும் அரச தலைவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.