ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருக்கும் முஸ்லிம் வாலிபர்கள் பெயர்களை வெளியிட தயாரா? – ராகுல்காந்திக்கு மோடி சவால்

Written by vinni   // October 26, 2013   //

narendra_modi--26_moss_031713111857உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி சவால் விட்டார். அவரது பேச்சு விவரம் வருமாறு:–

ரெயில் நிலையத்தில் டீ விற்று வாழ்க்கையை தொடங்கிய என்னை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. டெல்லியில் என்னை அமர வைத்தால் நமது நாட்டின் கருவூலத்துக்கு நான் காவலாளியாக இருப்பேன்.

காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் 60 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இதனால் அவர்கள் தங்களை மன்னர்கள் போல கருதி கொண்டிருக்கிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு 60 மாதங்கள் வாய்ப்பு தாருங்கள். இந்திய நாட்டை உலகமே வியக்கும் வகையில் மாற்றிக் காட்ட முடியும். மக்களின் கண்ணீருக்கும், கவலைகளுக்கும் பதில் சொல்லும் அரசாக பா.ஜ.க. அரசு திகழும்.

காங்கிரசின் இளவரசராக வலம் வருபவர் (ராகுல்) இந்தூர் பொதுக் கூட்டத்தில் பேசியதை நான் படித்தேன். முசாபர் நகரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக அந்த இளவரசர் கூறி இருக்கிறார்.

அவருக்கு இந்த தகவலை உளவுத்துறை அதிகாரி சொன்னாராம். உளவு துறை அதிகாரி, அந்த தகவலை அந்த இளவரசரிடம் (ராகுல்) ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.

இளவரசர் சாதாரண எம்.பி. பதவி தான் வகித்து வருகிறார். அவரிடம் உளவுத்துறை அதிகாரி தகவலை பகிர்ந்து கொண்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும்.

முசாபர் நகர்  ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறும் காங்கிரஸ் இளவரசர் அந்த வாலிபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். இதற்கு அவர் தயாரா? என்று சவால் விடுகிறேன்.

ஒரு வேளை அவர் அந்த முஸ்லிம் வாலிபர்களின் பெயரை வெளியிடா விட்டால், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர் அவமதிப்பதாகத்தான் அர்த்தம். இதற்காக அந்த இளவரசர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு அந்த இளவரசர் தன் பாட்டியை சுட்டுக் கொன்ற சோகக்கதையை சொல்லி அழுது இருக்கிறார். நான் இங்கு அழுவதற்கு வரவில்லை. உங்கள் கண்ணீரை துடைக்கவே வந்திருக்கிறேன்.

பாட்டியை கொன்றவர்கள் மீது 15 ஆண்டுகள் வரை கோபத்துடன் இருந்ததாக இளவரசர் கூறி இருக்கிறார். அந்த சம்பவத்துக்காக ஆயிரக்கணக்கான சீக்கியர்களை உங்கள் கட்சி கொன்றதே, அதற்காக இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை அளிக்கப்படவில்லையே.

கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக நீங்கள் வருத்தமோ, கோபமோபட்டதுண்டா? காயம் மீது உப்பு தடவும் வேலையை இளவரசர் கைவிட வேண்டும்.

பந்தல்கண்ட் விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் சரியாக பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் உத்தரபிரதேச அரசியல்வாதிகள் அந்த பணத்தை கொள்ளையடித்து தங்கள் பைகளில் போட்டு விட்டனர்.

காங்கிரஸ் இளவரசர் ஏழைகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்கிறார். அவர் கட்சி கொடுத்துள்ள பரிசு இந்த ஏழ்மைதான்.

உத்தரபிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் நடமாடுவதாக காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார். அப்படியானால் அவர் கட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்.

ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று பதவி ஏற்கும் போது உறுதி மொழி கொடுப்பார்கள். இதுவெல்லாம் காங்கிரஸ் இளவரசருக்கு தெரியுமா? அவர் ரகசிய காப்பு உறுதிமொழி எடுக்கவில்லையா?

உத்தரபிரதேசத்தில் ஏராளமான வளம் உள்ளது. நீங்கள் நினைத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும்.

காங்கிரஸ் அதை செய்யாமல் “பேக்கேஜ்” என்ற பெயரில் திட்டங்களை அறிவிக்கிறது. காங்கிரசை நீங்கள் “பேக்கிங்” செய்யும் காலம் வந்து விட்டது.

இவ்வாறு மோடி பேசினார்.


Similar posts

Comments are closed.