செல்போனில் பெண் போலீசாருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

Written by vinni   // October 25, 2013   //

arrest-recordsபோலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணான 100–க்கு ஏதாவது ஆபத்து என்றாலோ… அவசரம் என்றாலோ… போன் செய்தால் போதும். அடுத்த நிமிடமே பிரச்சினைக்குரிய இடத்தில் போலீசார் ஆஜராகி விடுவார்கள். ஆனால் சமீப காலமாக சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இது போன்ற அழைப்புகள் வருகிறதோ, இல்லையோ, தேவையில்லாத அழைப்புகளும், மிரட்டல் போன்களும் குவிந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு அறைக்கு அதிக அளவில் வெடிகுண்டு மிரட்டல் போன்கள் வந்து கொண்டே இருந்தது. எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த யுவராஜ் என்ற வாலிபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னர், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் பெண் போலீசாருக்கே செக்ஸ் தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் அருகே உள்ள வடநெமிலியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு:–

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தால், பெண் போலீஸ் ஒருவரின் கம்ப்யூட்டரில் பதிவான குரல்தான் உங்களை வரவேற்கும்.

‘‘வணக்கம். காவல் கட்டுப்பாட்டு அறை, தவறாக அழைத்திருந்தால் இணைப்பை துண்டிக்கவும். காவல் உதவி தேவையென்றால் எண் ஒன்றை அழுத்தவும்’’ என்ற பெண் போலீசின் குரல் ஒலிக்கும். தேவையில்லாத அழைப்புகளை தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதையெல்லாம் மீறி கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில மாதங்களாகவே செல்போனில் பேசி, வாலிபர் பன்னீர் செல்வம் பெண் போலீசாரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி வந்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் போன் செய்யும் போதெல்லாம், பெண்களின் அங்க அடையாளங்களை சொல்லி பன்னீர் செல்வம் அருவறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார்.

நேற்று இரவும் 9 மணிக்கு வழக்கம் போல கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த பன்னீர் செல்வம், பெண்களிடம் பேசக்கூடாத வார்த்தைகளையெல்லாம் பெண் போலீசிடம் அள்ளி வீசியிருக்கிறார். இப்படி எல்லை மீறி பெண் போலீசுக்கு தொல்லை கொடுத்த அவர், உச்சக்கட்டமான ‘செக்ஸ்’ வார்த்தைகளையும் உபயோகப்படுத்தி இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன போலீசார், பன்னீர் செல்வத்தின் ‘‘கெட்ட வார்த்தை’’களுக்கு முற்றுப் புள்ளி வைக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இது பற்றி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் முருகன், எழும்பூர் போலீசில் புகார் செய்தார். எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில் கடந்த 7 மாதங்களில் பன்னீர் செல்வம் 600 முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஆபாசமாக பேசி பெண் போலீசாரை திணறடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்தல், மிரட்டல் விடுத்தல், தகவல் தொடர்பு சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளும் அவர் மீது பாய்ந்தது.

இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பன்னீர் செல்வம் சிறையில் அடைக்கப்படுகிறார்.


Similar posts

Comments are closed.