முதலமைச்சர் விக்னேஸ்வரனால் காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது – கோதபாய

Written by vinni   // October 25, 2013   //

MAN BEHIND THE 5.pngவட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனால் காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை பாதுகாக்கும் பொறுப்பு முதலமைச்சரைச் சாரும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்த்து சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தவே முனைப்பு காட்ட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கைச் சேர்ந்த 80 வீதமானவர்கள் இராணுவத்தினர் பிசன்னமாகியிருக்க வேண்டுமென்றே விரும்புகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுயாதீன ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர், மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடினமான முயற்சியில் ஈட்டப்பட்டுள்ள சமாதானத்தை நிலைநாட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை மீன்பிடி வளங்களை அழித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தெற்குடன் முரண்பாட்டை வளர்க்கும் வகையில் தமிழ் ஊடகங்கள் செயற்படக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Similar posts

Comments are closed.