வட மாகாணசபையில் முதல் அமர்வு இன்று

Written by vinni   // October 25, 2013   //

tna_north_membersவடக்கு மாகாணசபையில் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது.

கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வட க்கு மாகாணசபையின் புதிய கட்டடத்தில், இந்த அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக, வடக்கு மாகாணசபைக் கட்டடம் திறந்து வைக்கப்படும்.

அதையடுத்து, புதிய உறுப்பினர்கள் சபைக்கு அனுமதிக்கப்பட்டு, அது தொடர்பான அதிகாரபூர்வ பணிகள் மேற்கொள்ளப்படும்.

அதையடுத்து, வடக்கு மாகாணசபையை ஆரம்பித்து வைத்து, ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உரையாற்றவுள்ளார்.

இதன் பின்னர், வடக்கு மாகாணசபையின் சபை முதல்வர், பிரதி முதல்வர் தெரிவுகள் இடம்பெறும்.

38 உறுப்பினர்களைக் கொண்ட வடக்கு மாகாணசபையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன், உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட அமைச்சரவை ஏற்கனவே தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக ஈபிடிபியை சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் செயற்படவுள்ளார்.

வடக்கு மாகாணசபையில் ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் 7 பேரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

வடக்கு மாகாணசபையில், அனந்தி சசிதரன் மற்றும் மேரி கமலா குணசீலன் ஆகிய இரண்டு பெண் உறுப்பினர்கள் மட்டும் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவானவர்கள்.

வடக்கு மாகாணசபையில் நான்கு முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் சார்பில் தெரிவான இருவரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவான ஒருவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் ஒருவரும் அடங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு சிங்களப் பிரதிநிதிகளும் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கின்றனர்.


Similar posts

Comments are closed.