காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

Written by vinni   // October 25, 2013   //

ramathasபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படும் வரை காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அமைப்பு நீக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மனித உரிமைகள், சர்வதேச மனித உரிமைச்சட்டங்கள் உள்ளிட்ட எதையும் மதிக்காமல் இலங்கை அரசு செயல்பட்டு வருகிறது.

ஈழத்தமிழர்களின் நலனுக்காக கடந்த ஆட்சியில் பல தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றின் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன்பின் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பின், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனித்தமிழீழம் அமைக்க ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவற்றின் மீது மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இம்முறையும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் தமிழக அரசு நின்றுவிடக்கூடாது. நான் ஏற்கனவே அறிவுறுத்தியதைப்போல, தமிழகத்தின் அனைத்துக் கட்சித்தலைவர்கள் அடங்கிய குழுவுடன் முதல்-அமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, தீர்மானத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்த வேண்டும். அப்போது தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஓரளவாவது பயன் கிடைக்கும்.

இவ்வாறு அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.