மட்டக்களப்பில் ‘மேய்ச்சல் தரையில் சிங்களவர் பயிர்ச்செய்ய இராணுவம் ஒத்துழைப்பு

Written by vinni   // October 24, 2013   //

batticaloa-cattle_CIமட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்கு அரசாங்கத்தினால் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் தரையில் சட்டவிரோத பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மாதவனை கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையில் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டள்ள வெளிமாவட்டத்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு இன்று அரசாங்க அதிபரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா , மாகாண சபை உறுப்பினர்களான இரா. துரைரெத்தினம், கி. துரைராஜசிங்கம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது பருவமழைக் காலம் என்பதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்போக நெல் வேளாண்மை செய்கைக்குரிய வேலைகளை மேற்கொண்டு வருவதால் கால்நடை பண்ணையாளர்கள் குறித்த தினத்திற்கு முன்னதாக கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால் கிரான் பிரதேசத்திலுள்ள மாதவனை மேய்ச்சல் தரைக் காணியில் சட்ட விரோத பயிர் செய்கையில் வெளிமாவட்டத்தவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கால்நடைகளை, மேய்ச்சல் தரைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செங்கலடி மற்றும் கிரான் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அரசாங்க அதிபர் பி.எம்.எஸ். சார்ள்ஸுடன் இடம்பெற்ற சந்திப்பில் சட்ட விரோத பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றுவதில் அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருக்குமானால் சட்ட நடவடிக்கை மூலம் வெளியேற்றுமாறு தாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதாக மாகாண சபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் கூறுகின்றார்.

தங்களின் கோரிக்கையை எற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் கிரான் பிரதேச செயலாளர் மூலம் இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தங்களுக்கு உறதியும் உத்தரவாதமும் தந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

கிரான் மற்றும் செங்கலடி பிரதேச கால்நடை பண்ணையாளர்கள் குறித்த மேய்ச்சல் தரைக்கு தரவை இராணுவ முகாம் வழியாகவே செல்ல வேண்டும். தற்போது அவ்வழியாக செல்ல இராணுவம் கால்நடை பண்ணையாளர்களுக்கு அனுமதி மறுப்பதால் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.


Similar posts

Comments are closed.