சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையப் பிரதிநிதி பேராசிரியர் சரஸ்வதி மனு தாக்கல்

Written by vinni   // October 23, 2013   //

prof-Saraswathiசிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் இந்தியா மற்றும் பிரித்தானியா கடும் அழுத்தங்களை உள்ளகத்தில் சந்தித்து வரும் நிலையில் , இவ்விவகாரத்தில் இந்திய மத்திய அரசு மற்றுமொரு நெருக்கடியினை சென்னை உயர்நீதிமன்றத்தில் சந்தித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையப் பிரதிநிதி பேராசிரியர் சரஸ்வதி அவர்களினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்று,  சிறிலங்காவில்  இடம்பெறவுள்ள பொதுநலவாய  மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உத்தரவிட வேண்டுமெனக் கோரிப்பட்டுள்ளது.

சென்னை நீதிமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த w.p28656/2o13 மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு  விசாரணைக்கு செவ்வாய்கிழமை (22-10-2013) வந்திருந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல் சரவணவேல் ஆஜராகியிருந்தார்.

இலங்கைத்தீவில் நடந்தேறிய இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு கடந்த மாதம் மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே சிறிலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேராசிரியர் சரஸ்வதி கோரியிருந்தார்.

இந்நிலையில் இம்மனு தொடர்பிலான முதல்விசாரணையில் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் அவர்கள், ‘தனிப்பட்ட காரணங்களுக்காக, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிறிலங்கா என்று அனைத்து நாடுகளுடனும் இந்தியா பகையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? இந்த கேள்வியை மனுதாரருக்கு மட்டுமல்ல, மனுதாரரின் வக்கீலான உங்களுக்கும் கேட்கிறேன். இந்த மனு மீதான விசாரணை 24ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று நீங்கள் பதில் அளிக்க வேண்டும்’ என்று கூறித் தீர்ப்பினை வியாழக்கிழமை (24-10-2013) தள்ளிவைத்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் இந்திய மத்திய அரசு பல்வேறு உள்ளக நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பேசு பொருளாகியுள்ள இவ்விவாகாரம் தொடர்பிலான செய்திகள் தமிழகத்தின் பல்வேறு ஊடகங்களின் கவனத்தினைப் பெற்றுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்சியான அழுத்தங்களை , பொதுநலவாய மாநாட்டு விவகாரத்தில் பிரித்தானிய அரசினை நோக்கி கொடுத்து வருகின்றார்கள்.

கடந்ந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்களைச் தொடர்சியாக சந்தித்து, அவர்கள் ஊடாக பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Similar posts

Comments are closed.