விஞ்ஞான ஆர்வமும் தொழில்நுட்ப அறிவும் தான் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் – கவர்னர் ரோசைய்யா

Written by vinni   // October 23, 2013   //

336caa95-800e-4b3e-9a14-1f3667ea6d14_S_secvpf (1)தேனி அருகே கொடுவிலார் பட்டியில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியின் 7வது ஆண்டு விழா நடந்தது. விழாவில் தமிழக கவர்னர் ரோசைய்யா கலந்து கொண்டு கல்லூரியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

விழாவில் கவர்னர் ரோசைய்யா பேசும் போது கூறியதாவது:–

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதன்மை இயக்க சக்தியாக கல்வி உள்ளது. நாட்டின் குடிமக்கள் வளரும் போது நாடும் வளரும். கல்வியின் முக்கிய நோக்கம் இளைஞர்களின் வளர்ச்சியை மேம்படுத்தி உலக அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்வதாக இருக்க வேண்டும்.

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் நமது தேவையாக உள்ளது. கனவாய் இருந்த தொழில்முறை கல்வியில் தற்போது தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களுக்கு விஞ்ஞான யுக்திகள் மற்றும் தொழில்நுட்ப அறிவு கட்டாயம் தேவை. விஞ்ஞான ஆர்வமும் தொழில்நுட்ப அறிவும் தான் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும்.

பொறியியல் அறிவு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றமும் தான் இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்கும். பல்கலைக்கழகங்கள் புதுப்புது சிந்தனைகளை உருவாக்கும் களமாக திகழ வேண்டும். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும்.

‘கனவை நோக்கி வாழ்க்கையில் நம்பிக்கையுடன் முன்னேறினால் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிட்டும்’ என்று அமெரிக்க இலக்கியவாதி ஹென்றி டேவிட் கூறியதை இந்த நேரத்தில் மாணவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். உலகம் உங்கள் கையில். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இவ்வாறு கவர்னர் ரோசைய்யா பேசினார்.

விழா முடிந்ததும் அங்கிருந்து குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு கவர்னர் ரோசைய்யா காரில் சென்றார். அங்கு அவர் தன்னுடைய மனைவி சிவலட்சுமியுடன் சாமி தரிசனம் செய்தார். கவர்னரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். கோவிலில் உள்ள சுரபி நதியில் கவர்னர் குடும்பத்தினர் கால்களை நனைத்து விட்டு ஐதீக முறைப்படி கோவிலுக்குள் சென்றனர்.

பின்னர் மூலவர் சிலை முன்பு நின்று சாமி தரிசனம் செய்த கவர்னர், தனது பெயர், ராசி, நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினார். அப்போது கோவில் நிர்வாகம் சார்பில், கவர்னர் ரோசைய்யாவுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.


Similar posts

Comments are closed.