4–வது நாளாக 1000 டன் தங்கம் தேடும் பணி தொடர்கிறது…

Written by vinni   // October 21, 2013   //

Narendra-Modi_15உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஷோபன்சர்க்கார் என்பவர், ராஜா ராவ்ராம் பக்சிங் தன் கனவில் தோன்றி உன்னாவ் பகுதியில் உள்ள தமது கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்து இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

அந்த 1000 டன் தங்கத்தை அரசு தோண்டி எடுக்க வேண்டும் என்று அவர் கடந்த சில ஆண்டுகளாக கூறி வந்தார்.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அந்த கோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் தேடும் பணியை தொடங்கியது. ஜேசிபி எந்திரங்கள் மற்றும் ஆழ்துளை கருவிகள் மூலம் கோட்டை பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதா என்று தேடப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இன்று (திங்கட்கிழமை) 4–வது நாளாக தங்கம் தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே 1000 டன் தங்கம் தேடப்படுவதை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் இதுபற்றி கூறுகையில், ‘‘1000 டன் தங்கம் தேடுவதை எல்லா நாடுகளும் உற்றுப் பார்க்கின்றன. இது தேவை இல்லாதது. அங்கு தங்கம் தோண்டுவதை விட்டு விட்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள 1000 டன்னுக்கு மேல் உள்ள தங்கத்தை திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து சாமியாரை அவர் அவமதித்து விட்டதாக கூறப்பட்டது.

சில இந்து அமைப்புகள் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி தங்கள் அதிருப்தியை வெளியிட்டன.

இதையடுத்து நரேந்திர மோடி உத்தரபிரதேச சாமியாருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘கடந்த பல ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்கள் கோபன் சர்க்கார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது தியாகத்துக்கு நான் தலைவணங்குகிறேன்’’ என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.