தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை: 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை

Written by vinni   // October 20, 2013   //

rain (1)தென்மேற்கு பருவ மழை காலம், வடகிழக்கு பருவ மழைகாலம் என இரு பருவ காலங்களில் மழை பெய்யும். ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் நீடிக்கும். இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டது.

தமிழ்நாடு மேற்கு தொடர்ச்சி மலைக்கு கிழக்குப் பகுதியில் உள்ளதால் மழை மறைவு பகுதியாக உள்ளது. என்றாலும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். அதே நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யும்.

இந்த ஆண்டு கேரளா, கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவுக்கு பெய்ததால் பெரும்பாலான அணைகள் நிரம்பி விட்டன. தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை தான் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடிக்கிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறி கடந்த 2 நாட்களாக காணப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் இலங்கைக்கு அருகே இந்தியப் பெருங்கடலின் மேலே வழிமண்டல மேல்அடுக்கில் சுழற்சி ஏற்பட்டு தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்றுடன் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் என்று திருவனந்தபுரம் வானிலை மையம் அறிவித்துள்ளது. தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி தமிழ்நாடு முழுவதும் பரவி இருப்பதால் தமிழ்நாடு முழுவதும், புதுச்சேரியிலும், அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு தாம்பரம். குரோம்பேட்டை, பல்லாவரம், நுங்கம்பாக்கம், கொடுங்கையூர், மாதவரம், புரசைவாக்கம், அயனாவரம் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை நுங்கம்பாக்கத்தில் 12 மி.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 23.2 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவடைவதை தொடர்ந்து சென்னையில் பரவலாக மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தொடர்ந்து சென்னையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதநகர் தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங் களில் பலத்த மழை பெய்தது.

சேலம் ஏற்காட்டில் நேற்று முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Similar posts

Comments are closed.