ரஷ்ய வான்வெளியில் சிதறடிக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்லின் துண்டு மீட்பு

Written by vinni   // October 18, 2013   //

APTOPIX Russia Meteoriteரஷ்யாவில் கடந்த பிப்ரவரி மாதம் விண்ணிலிருந்து விழுந்த 17 டன் எடை கொண்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்தது. அந்த விண்கல், செல்யாபின்ஸ்க் நகரின் மேல் 30-வது கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து சிதறடிக்கப்பட்டது. அப்போது அந்த விண்கல் மூன்று பெரும் துண்டுகளாகவும் மற்றும் பல சிதறல்களாகவும் செல்யாபின்ஸ்க் நகரிலும், அருகிலிருந்த செபர்குல் ஏரியிலும் விழுந்தது. அதில் 1200 மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அப்போது பனி உறைந்த ஏரியை சுமார் 20 அடி அகலத்திற்கு உடைத்துக் கொண்டு ஒரு பெரிய விண்கல் ஒன்று விழுந்தது. மேலும் சில விண்கல் சிதறல்களும் அந்த ஏரியில் விழுந்தன. அவற்றைத் தேடும் பணி கடந்த ஏழு மாதங்களாக நடந்துவந்தன.

நவீன கருவிகள் மற்றும் நீர் மூழ்கி வீரர்களை கொண்டு தேடப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு முன் அந்த ஏரியின் 40 அடி ஆழத்தில் 8 அடி சேறுக்கு அடியில் கிடந்த அந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நேற்று ஏரியின் கரையில் பார்வையாளர்கள் குழுமியிருந்த நிலையில், அந்த விண்கல் பத்திரமாக வெளியில் எடுக்கப்பட்டது.

அதை உள்ளூர் தொலைக்காட்சிகளும் நேரலையாக ஒளிபரப்பின. 1250 பவுண்டை விட அதிக எடையுடைய அந்த விண்கல் 450 கோடி ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நமீபியாவில் 66 டன் எடையுடைய ஒரு விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகின் மிகப்பெரிய விண்கல் என்று கூறப்படுகிறது.


Similar posts

Comments are closed.